இந்தியாவின் பிரபல டிஜிட்டல் பேமெண்ட்ஸ் நிறுவனமான பேடிஎம் (Paytm) ன் கீழ் இயங்கும் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான சுரிந்தர் சாவ்லா தனது பதவிகளில் இருந்து விலக உள்ளதாக அறிவித்துள்ளார்.
ஏற்கனவே பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி பல தடைகளை தாண்டி 5 வங்கிகள் உடன் இணைந்து தனது யூபிஐ மற்றும் பிற முக்கிய சேவைகளை அளித்து வருகிறது.

பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி மீது ஆர்பிஐ கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்பு பல அதிகாரிகள், தலைவர்கள் வெளியேறிய நிலையிலும் தொடர்ந்து இயங்கி வந்தது. ஆனால் தற்போது MD மற்றும் CEO ஆக இருக்கும் சுரிந்தர் சாவ்லா பதவி விலகியுள்ளது இந்திய நிதித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்ன காரணம்?: பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் (One 97 Communications) மும்பை பங்குச்சந்தைக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் சுரிந்தர் சாவ்லா பதவி விலகும் செய்தியை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் சமர்ப்பித்த அறிக்கையில் "எங்களது இணை நிறுவனமான பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (PPBL) ஏப்ரல் 8, 2024, மாலை 5.23 மணிக்குத் தெரிவித்துள்ள தகவலின்படி, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான சுரிந்தர் சாவ்லா தனது தனிப்பட்ட காரணங்களுக்காக, பிற சிறந்த தொழில் வாய்ப்புகளைத் தேடுவதற்காகவும் ஏப்ரல் 8, 2024 அன்று தனது பதவி விலகுவதாக அறிவித்து ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எப்போது பதவி விலகுவார்?: சுரிந்தர் சாவ்லா-வின் ராஜினாமாவை விஜய் சேகர் தலைமையிலான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிர்வாகம் மற்றும் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி நிர்வாகம் ஏற்றுக்கொண்டது. இதன் மூலம் சுரிந்தர் சாவ்லா ஜூன் 26, 2024 அன்று வணிக நேர முடிவிற்குப் பிறகு பதவி விலகுவார்.
இதேவேளையில் இரு தரப்பினர் இடையேயான ஒப்புதல் உடன் இந்த இறுதி நாள் மாற்றப்படலாம் என்று தனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீர் ராஜினாமா ஏற்படுத்தும் விளைவுகள்: கடந்த ஆண்டு ஜனவரியிலேயே பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி ரிசர்வ் வங்கியின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, சுரிந்தர் சாவ்லா நிறுவனத்தில் சேர்ந்தார். ஆர்பிஐ-யின் கடுமையான நடவடிக்கையின் மத்தியில் இவரின் பதவி விலகல் செய்துள்ளது.
இந்நிலையில், இவரின் திடீரென பதவி விலகல் நிறுவனத்தின் செயல்பாடுகளை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி எதிர்காலத்தில் எவ்வாறு செயல்படும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.
Paytm பங்குகள் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் 1.95% குறைந்து ரூ 404.30 இல் முடிந்தது. பிஎஸ்இயில் முந்தைய வர்த்தக நாள் முடிவான ரூ.412.35க்கு எதிராக இன்றைய வர்த்தகத்தில் அதிகப்படியாக ரூ.416.45 வரையில் உயர்ந்தது.
மேலும் இன்றைய வர்த்தக முடிவில் பேடிஎம் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.25,689 கோடியாகக் குறைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தையில் Paytm-ன் 1.78 லட்சம் பங்குகள் கைமாறி ரூ.7.23 கோடி விற்றுமுதல் கண்டது.


Click it and Unblock the Notifications