பேடிஎம் பற்றி கேள்விபடாதவர்கள் இருக்க முடியாது. ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் என்ற நிறுவனம் தான் ஃபின்டெக் தளமான பேடிஎம்-ஐ இயக்கி வருகிறது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்திற்கான நான்காம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை நிறுவனம் வெளியிட்டது. அதில் ரூ. 540 கோடி நிகர இழப்பை சந்தித்ததாக தெரிவித்திருக்கிறது.
செலவுகளை எல்லாம் கழித்த பின்னர் இந்தக் காலாண்டில் ரூ. 23 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எம்பிளாயி ஸ்டாக் ஆப்ஷன் பிளான் போன்ற செலவுகளையும் இந்த காலாண்டிலேயே நிறுவனம் கணக்கில் காட்டியுள்ளது. அதோடு ஒவ்வொரு ஆண்டும் நிறுவனத்தின் சொத்துக்களின் மதிப்பு குறைவதையும் நிறுவனங்கள் கருத்தில் கொள்ளும். இதையெல்லாம் சேர்த்து தான் இந்த முறை நிதிநிலை அறிக்கை வெளியாகியுள்ளது.

4-வது காலாண்டில் பேடிஎம்-இன் செயல்பாடுகள் மூலம் கிடைத்த வருவாய் ரூ. 1912 கோடியை எட்டியுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் இந்தத் தொகை ரூ. 2267 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு செயல்பாடுகளின் மூலம் கிடைத்த வருவாய் 16 சதவீதம் குறைந்துள்ளது.
2025-ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ. 208 கோடி இழப்பைச் சந்தித்ததாக நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால் 4-வது காலாண்டில், டிசம்பர் காலாண்டுடன் ஒப்பிடுகையில் வருவாய் விகிதம் 5% அதிகரித்துள்ளது. பேடிஎம் நிறுவனத்தின் வட்டிச் செலவுகள், வரி, தேய்மானம் மற்றும் கடன் தொகை ஆகியவை ரூ. 81 கோடியாக உள்ளது. இது கடந்த மூன்றாவது காலாண்டில் ரூ. 121 கோடியாக இருந்தது.
பேடிஎம் நிறுவனம் யுபிஐ மூலம் பணம் பெற்றதற்காக ரூ. 70 கோடி இன்சென்டிவ் பெற்றுள்ளது. இதுவும் அவர்களின் வருவாயில் ஒரு பகுதியாக கருதப்பட்டுள்ளது. தற்போது பேடிஎம் நிறுவனத்தில் 12,809 கோடி கேஷ் பேலன்ஸ் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேஷ் பேலன்ஸ் என்பது ரொக்கப் பணமாக நிறுவனத்திடம் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை குறிக்கிறது. அதிக ரொக்க கையிருப்பு இருப்பது பொதுவாக நிறுவனங்களுக்கு நல்ல விஷயம். ஏனெனில் உடனடி செலவுகள் மற்றும் எதிர்கால முதலீட்டுக்கு இவை உதவும்.


Click it and Unblock the Notifications