சென்னை: டாடா குழுமத்தில் ரத்தன் டாடாவின் மறைவுக்குப் பிறகு முக்கியமான நபராக ஒருவர் உருவெடுத்து வருகிறார். அவர் யார் என்பதை இந்த கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
டாடா மோட்டார்ஸ் குழுமத்தின் தலைமை நிதி அதிகாரியாக இருப்பவர் பிபி பாலாஜி.
இவர் தற்போது டாடா குழுமத்தில் தவிர்க்க முடியாத ஒரு நபராக உருவெடுத்து இருக்கிறார். இவர் ஏர் இந்தியா, டைட்டன், டாடா டெக்னாலஜிஸ் மற்றும் டாடா கன்சியூமர்ஸ் ஆகிய நிறுவனங்களின் வாரிய உறுப்பினராக தற்போது நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். இதன் மூலம் டாடா குழுமத்தில் அதிகாரமிக்க நபராக இவர் மாறி வருவது தெரியவந்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன், பாலாஜியை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்காக வேலைக்கு தேர்வு செய்தார். டாடா நிறுவனத்தில் சேர்வதற்கு முன்பாக பாலாஜி யூனிலிவர் நிறுவனத்தில் நிதி செயல்பாடுகளுக்கு தலைமை வகித்து வந்தவர்.
தலைமை நிதி அதிகாரியாக யுனிலிவரின் தெற்காசியப் பிரிவில் சிறப்பாக பணியாற்றியவர். யூனிலிவர் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார். இதனால் என் சந்திரசேகரன் இவரை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி பொறுப்பிற்கு தேர்வு செய்தார்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் பாலாஜி நிதி அதிகாரியாக பொறுப்பேற்ற பிறகு நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார். குறிப்பாக பல்வேறு செயல்பாடுகளை அவர் ஒழுங்கு படுத்தினார், மேலும் தேவையற்ற செலவினங்களை குறைத்து டாடா மோட்டார்ஸ் தயாரிப்புகளை முன்னிலைப்படுத்தியதில் பெரிய பங்கு இவருக்கு இருக்கிறது. இவர் பதவியேற்ற பிறகு தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கமர்ஷியல் வாகன பிரிவு பெரிய அளவிலான லாபத்தை ஈட்டியது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கடன்களை குறைத்தது மின்சார வாகனத்தை நோக்கி முன்னெடுத்து சென்றது என பல்வேறு பெருமை பாலாஜியை சாரும். பாலாஜியின் முயற்சியால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடனே இல்லாத நிறுவனமாக மாறி இருக்கிறது. மேலும் ஆயிரம் கோடி பணத்தை கையிருப்பாக கொண்டிருக்கும் நிறுவனம் என்ற புகழையும் பெற்றுள்ளது.
2024 ஆம் நிதி ஆண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இதுவரை இல்லாத அளவாக 4. 38 லட்சம் கோடி ரூபாய் என்ற வருமானத்தை ஈட்டி உள்ளது. பாலாஜியின் இந்த செயல்களை பாராட்டி டாட்டா நிறுவனம் அவருக்கு 2024ஆம் ஆண்டில் 20 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கியுள்ளது. இது கடந்த 2023ஆம் ஆண்டினை விட 24% அதிகமாகும்.


Click it and Unblock the Notifications