நம் நாட்டில் இருக்கும் முதன்மை ஆவணங்கள் என்று பார்த்தால் அவை பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு தான். பான் கார்டு என்பது தனி நபர்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்காக வருமானவரித்துறை வழங்கும் தனித்துவமான 10 இலக்க அடையாள எண் கொண்ட கார்டு ஆகும். இது அடையாளச் சான்றாக செயல்படுவதோடு.. வங்கி கணக்குகளை திறப்பதற்கு, கடனுக்கு விண்ணப்பிக்க, வருமான வரி தாக்கல் செய்ய என பலவற்றுக்கும் பயன்படுகிறது. முதலீடு செய்ய வேண்டும் என்றாலும் அதற்கும் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு தேவைப்படும். இந்நிலையில் ஒருவரிடம் 2 பான் கார்டுகள் இருந்தால்.. அவற்றுக்கு எவ்வளவு அபராதம் விதிக்கப்படும்? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
பான் கார்டு எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது?: பான் கார்டில் கார்டு வைத்திருப்பவரின் பெயர், புகைப்படம், பிறந்த தேதி மற்றும் தனிப்பட்ட பான் நம்பர் இருக்கும். இந்தியாவில் வரி விதிக்க கூடிய வருமானம் ஈட்டும் எவருக்கும் பான் கார்டு இன்றியமையாத ஆவணமாகும்.

இந்தியாவில் ஒரு நபர் 2 பான் கார்டுகளை வைத்திருக்க முடியுமா?: வருமான வரித்துறையின் விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி, தனிநபர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு தனிநபருக்கும் அவர்களின் பெயரில் வழங்கப்பட்ட ஒரே ஒரு பான் கார்டு மட்டுமே இருக்க அனுமதிக்கப்படுகிறது.
ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருப்பது வருமானவரிச் சட்டத்தை மீறுவதாக கருதப்படுகிறது. சட்ட ரீதியான விளைவுகள் மற்றும் அபராதங்களுக்கு இது வழி வகுக்கலாம். வருமான வரி பதிவேடுகளை குழப்பி தனி நபரின் வரி செலுத்துதல்களில் குளறுபடிகளை ஏற்படுத்தும் வகையில் 2 பான் கார்டுகளை வைத்திருப்பதற்கு அபராதங்கள் விதிக்கப்படுகிறது.
ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகளுக்கு அபராதம்: ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருப்பது கண்டறியப்பட்டால், வருமான வரிச் சட்டம், 1961-இன் பிரிவு 272B-இன் கீழ், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப் பிரிவின்படி, ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருக்கும் தனிநபர் மீது 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம்.
எனவே, தனிநபர்கள் தங்களிடம் ஒரே ஒரு பான் கார்டு மட்டுமே இருப்பதையும், கவனக்குறைவாகவோ அல்லது வேறுவிதமாகவோ தாங்கள் வாங்கிய கூடுதல் பான் கார்டுகளை ஒப்படைக்க வேண்டும்.
ஒருவேளை உங்களிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகள் இருந்தால் அவற்றை ஒப்படைத்து விடுவது சட்ட ரீதியாக நீங்கள் ஒழுங்கான நடைமுறையை கடைபிடிக்கிறீர்கள் என்பதை உறுதி செய்யும். 2 பான் கார்டுகள் ஏமாற்றும் நோக்கங்களுக்காக மட்டுமே வாங்கி விடுவார்கள் என்று அர்த்தம் கிடையாது. சில நேரங்களில் பான் கார்டுக்கு விண்ணப்பித்து நீண்ட நாட்களாகியும் பான் கார்டு வராமல் இருக்கும் .இது போன்ற சூழலில் இன்னொரு பான் கார்டு சிலர் பெற்று விடுவார்கள். அதே போல சிலர் வைத்திருக்கும் பான் கார்டுகளில் ஏதேனும் பிழை இருந்தால் அவற்றை மாற்றுவதற்கு பதிலாக வேறு பான் கார்டு பெற விண்ணப்பித்து விடுவார்கள். இது போன்ற சூழலிலும் 2 பான் கார்டு இருக்கலாம். எனவே ஒன்றை ஒப்படைப்பது தேவையில்லாத அபராதங்கள் விதிக்கப்படுவதை தடுப்பது மட்டுமின்றி சட்ட ரீதியாக நீங்கள் நல்ல நடைமுறையை பின்பற்றுகிறீர்கள் என்பதை உறுதி செய்யும்.


Click it and Unblock the Notifications