பொதுமக்கள் அனைவருக்குமே சமூக பாதுகாப்பு அமைப்பை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் தான் அடல் பென்ஷன் யோஜனா அதாவது அடல் ஓய்வூதிய திட்டம்.
அமைப்புசாரா பிரிவுகளில் வேலை செய்யக்கூடிய நபர்களும் ஓய்வு காலத்தில் ஓய்வூதிய தொகை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் மத்திய அரசு இந்த சமூக பாதுகாப்பு திட்டத்தையே அறிவித்தது. இதன்படி மாதந்தோறும் 1000 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாய் வரை ஓய்வூதிய தொகை கிடைக்கும். குறிப்பிட்ட அந்த பயனாளி இறக்கும் வரை இந்த ஓய்வூதிய தொகை என்பது வழங்கப்படும்.

எவ்வளவு தொகையை பங்களிப்பாக செய்கிறாரோ அதை பொறுத்து அவருக்கு கிடைக்க வேண்டிய ஓய்வூதிய தொகை என்பது நிர்ணயம் செய்யப்படும் . இந்த திட்டத்தில் பங்களிப்பு செய்த நபர் இறந்த பின் அவருடைய வாழ்க்கை துணை ஓய்வூதிய தொகை பெறுவார். மத்திய ஓய்வூதிய நிதிய ஒழுங்கமைப்பு மற்றும் மேம்பாட்டு ஆணையமான பிஎஃப்ஆர்டிஏ தான் அடல் பென்ஷன் திட்டத்தை மேலாண்மை செய்து வருகிறது.
இதுவரை இந்தியாவில் 8.45 கோடி பேர் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் இணைந்து தங்களுடைய பங்களிப்பை செய்து வருகிறார்கள். இதன் மூலம் இவர்கள் 60 வயதில் பணி ஓய்வு பெற்ற பிறகு மாதம் தோறும் குறைந்தபட்ச ஓய்வூதிய தொகை இவர்களுக்கு கிடைத்துவிடும் .1000 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாய் வரை இந்த ஓய்வூதியம் என்பது கிடைக்கும் . பணி ஓய்வு காலத்தில் இந்த தொகை அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். கணவர் இறந்துவிட்டால் அவருடைய மனைவி அந்த தொகையை பெறுவதற்கு தகுதி பெற்றவராக மாறுகிறார் .

இந்தியாவை சேர்ந்த 18 முதல் 40 வயதுக்கு உட்பட்ட அனைவருமே அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் இணைய முடியும் . இதற்கு ஆதார இணைக்கப்பட்ட வங்கி கணக்கு மற்றும் செயல்பாட்டில் இருக்கக்கூடிய மொபைல் எண் இருந்தால் போதும் . குறைந்தபட்சம் 20 ஆண்டு காலத்திற்கு மாதம் தோறும் பங்களிப்பு செய்தால் 60 வயதில் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும்.
வீட்டுக்கு அருகில் உள்ள வங்கி கிளைகள் அல்லது தபால் அலுவலகங்களுக்கு சென்றாலே இதற்கான விண்ணப்பம் கிடைக்கும். அதில் நம்முடைய பெயர், வயது, எவ்வளவு தொகையை பங்களிப்பு செய்யப் போகிறோம், வங்கி கணக்கு அல்லது தபால் கணக்கு எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். இதனை அடுத்து அந்த விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு நாமினியையும் நியமிக்க வேண்டும்.
42 ரூபாயிலிருந்து 1454 ரூபாய் வரை சந்தா தொகை என்பது மாறுபடும். இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கக்கூடிய ஓய்வூதிய தொகையை அதிகரிப்பது குறித்து அரசிடம் திட்டமிருக்கிறதா என நாடாளுமன்றத்தில் கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்திருக்கும் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி ஓய்வூதிய தொகையை அதிகரித்தால் அதற்கு ஏற்ப சந்தா தொகையும் அதிகரிக்கப்பட வேண்டும், இது சந்தாதாரர்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும் என்பதால் இப்போதைக்கு அடல் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதிய தொகையை அதிகரிக்கும் திட்டம் அரசிடம் இல்லை என விளக்கம் தந்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications