ஈரானில் போர் தொடங்கி ஒரு மாத காலம் ஆகிவிட்டது, இருந்தாலும் போர் சூழல் தணிவதற்கான வாய்ப்பே இல்லை என கூறும் அளவிற்கு ஒவ்வொரு நாளும் போர் தீவிரமடைந்த வண்ணமே இருக்கிறது. ஒரு புறம் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானோடு அமைதி பேச்சு வார்த்தையை நடத்தி வருகிறோம், ஏப்ரல் ஆறாம் தேதி வரை ஈரான் மின்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை நிறுத்தி வைக்கிறோம் என கூறியிருந்தார்.
அதே வேளையில் அமெரிக்கா , ஈரானில் தரைவழி தாக்குதலை நடத்துவதற்கு ஆயத்தமாகி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அமெரிக்க அரசு அதிகாரிகள் வாஷிங்டன் போஸ்டிற்கு அளித்துள்ள பேட்டியில் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் ஈரானில் சில வாரங்களுக்கு தரைவழி தாக்குதல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக கூறியிருக்கிறது.

இதன்படி முதல் கட்டமாக 2500 அமெரிக்க ராணுவ வீரர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அமெரிக்கா ஈரானில் தரைவழி தாக்குதலில் ஈடுபட்டால் இந்த போர் அபாய கட்டத்தை நோக்கி செல்வதாகவே கருத வேண்டும். ஏற்கனவே அமெரிக்கா தரைவழி தாக்குதலை தொடங்க நினைத்தாலே போதும் இதுவரை இல்லாத பேரழிவை சந்திப்பார்கள் என ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த சூழலில் தான் அமெரிக்க ராணுவம் வீரர்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி வருவது தெரிய வந்திருக்கிறது. அமெரிக்க ராணுவம் ஈரானில் கால் பதிக்கிறது எனும்போது இந்தப் போர் இன்னும் தீவிரமாகும், குறிப்பிட்ட சில பகுதிகளை குறி வைத்து ராணுவ வீரர்கள் அனுப்பி தாக்குதல் நடத்தப்படும் என சொல்லப்படுகிறது.

ஈரானின் முக்கிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவினை கைப்பற்றுவது , ஹார்முஸ் ஜலசந்தியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது அங்கே இருக்க கூடிய ஈரான் ராணுவ கட்டமைப்புகளை அழிப்பது உள்ளிட்டவற்றை நோக்கமாகக் கொண்டு அமெரிக்க ராணுவ வீரர்கள் தரைவழி தாக்குதலில் ஈடுபடுத்தப்படலாம் என சொல்லப்படுகிறது. இந்த தாக்குதல் 2 வாரம் முதல் 2 மாதம் வரை நீடிக்கும் என சொல்லப்படுகிறது.
இதனால் ஈரான் போர் இன்னும் தீவிரமடைவது உறுதியாகிவிட்டது. இது உலக கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும். இந்தியா போன்ற பல்வேறு நாடுகளுக்கு இன்னமும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை. இதற்கிடையே ஈரான் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் களமிறங்கி இருக்கின்றனர். ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேலை நோக்கி இரண்டு ஏவுகணைகளை வீசி இருப்பது தெரிய வந்திருக்கிறது.
குறிப்பிட்ட நாடுகளுக்கு இடையிலான போரில் கிளர்ச்சியாளர்களும் இணைந்திருப்பதால் ஈரான் போர் ஒரு இலக்கே இல்லாமல் தொடர்ந்து தீவிரமடைந்து வருவது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு எப்படி முடிவு எட்டப்படும் என்பது கேள்விக்குறியாகவே நீடிக்கிறது.


Click it and Unblock the Notifications