2020 லாக்டவுன் முடிந்து சில மாதங்களுக்கு முன்பு டெல்லிக்கு வந்த பல லட்சம் வெளிமாநில ஊழியர்கள் மீண்டும் சொந்த ஊருக்கே செல்ல வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.
ஒரு வருடத்திற்குள் 2வது முறை டெல்லியில் லாக்டவுன் அறிவிப்புகள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ள காரணத்தால் வேலைவாய்ப்புக் கிடைப்பது என்பது மிகவும் கடினமாகியுள்ளது.
டெல்லி அரசு முதல் ஒரு வாரம் மட்டுமே முழு லாக்டவுன் அறிவித்தது, இந்த லாக்டவுன் நீட்டிக்கப்படாத என நம்பியிருந்த வெளிமாநில ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இதனால் வெளிமாநில கூலித் தொழிலாளர்களின் தற்போது கூட்டம் கூட்டமாக டெல்லியை விட்டு வெளியேறத் துவங்கியுள்ளனர்.
தலைநகர் டெல்லி
நாட்டின் தலைநகரான டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் மருத்துவமனையில் நோயாளிகளுக்குப் படுக்கை இல்லாமல், போதுமான மருந்து, ஆக்சிஜன் இல்லாத நிலை உள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு பணியாற்ற வந்த கூலித் தொழிலாளர்கள் வேறு வழி இல்லாமல் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.
வெளிமாநில ஊழியர்கள்
கடந்த ஆண்டு நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட போது நீண்ட காலம் வேலையில்லாமல் வெளிமாநில ஊழியர்கள் டெல்லியில் தங்கியிருந்த நிலையில் உணவு, பணம், வீட்டு வாடகை எனப் பல கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டனர், இதனால் இந்த முறையும் இதுபோன்ற நிலைக்குச் செல்ல விரும்பாமல் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட உடனே சொந்த ஊருக்குச் செல்ல முடிவு செய்துள்ளனர்.
ரயில் சேவை
2020ல் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட போது மேற்கு வங்காளத்தில் இருக்கும் தனது சொந்த ஊருக்குச் செல்ல எம்பிராய்டரி வேலை செய்யும் ஷேக் அரிபுல் அலி அரசின் சிறப்பு ரயிலில் செல்ல சுமார் 3200 ரூபாய் செலவு செய்துள்ளார், தற்போது ரயில்கள் எவ்விதமான தடையுமின்றி இயங்கும் காரணத்தால், முழு லாக்டவுன் அறிவிக்கும் முன்னரே சொந்த ஊருக்கு குடும்பத்துடன் செல்ல முடிவு செய்துள்ளார் ஷேக் அரிபுல் அலி.
வீட்டு வாடகை சுமை
4 பேர் தங்கியிருக்கும் அறைக்குத் தற்போது 8000 ரூபாயை வாடகையாக அளித்து வருகிறோம். லாக்டவுன் அறிவிப்பால் வேலையும் குறைந்துள்ளது வருமானமும் குறைந்துள்ளது, மேலும் வீட்டின் உரிமையாளரும் வாடகை குறைக்கவோ, அல்லது சலுகை அளிக்கப்படாத நிலையில் வீட்டை காலி செய்துவிட்டு சொந்த ஊருக்குச் செல்ல வேண்டிய நிலைக்குத் தாங்கள் தள்ளப்பட்டு உள்ளதாக ஷேக் அரிபுல் அலி தெரிவித்துள்ளார்.
டெல்லியை விட்டு வெளியேறிய 800 பேர்
இதே எம்பிராய்டரி வேலை செய்யும் மற்றொரு நபரான ரியாசூல் ஹூசைன் கூறுகையில், கிட்டதட்ட 800 பேர் ஏற்கனவே சொந்த ஊருக்குச் சென்றுவிட்டதாகத் தெரிவித்துள்ளார். தற்போது லாக்டவுன் அறிவிக்கப்பட்ட முதல் 2 வாரத்திற்கு நிலுவையில் இருந்த சில வேலைகள் இருந்த காரணத்தால் தங்கியிருந்தோம், தற்போது இந்த வேலைகளும் முடிந்த நிலையில், புதிய வேலைகள் கிடைக்காத நிலையில் சொந்த ஊருக்குச் செல்கிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.
இதுதான் பிரச்சனை
இந்தத் தொழில் மட்டும் அல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்து நகரங்களுக்கு வேலை செய்ய வந்துள்ள மக்களின் பெரும்பாலான நிலை இதுதான். ஒருபக்கம் வேலையில்லாமல் வருமானம் குறைந்துள்ளது, குறைந்த வருமானத்தைக் கொண்டு வீட்டு வாடகை, உணவு ஆகியவற்றை நிர்வாகம் செய்ய முடியாத காரணத்தால் வேறு வழி இல்லாமல் சொந்த ஊருக்குச் செல்ல முடிவு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications