மத்திய கிழக்குப் பகுதியில் ஈரானின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் அடுத்தடுத்து வளைகுடா நாடுகளுக்கு மிரட்டல் விடுத்து வருகிறது. இதுநாள் வரையில் ஹார்முஸ் வழித்தடத்தை முடக்கியும், எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியும் வந்த ஈரான் கடந்த 1-2 வாரங்களாக இண்டர்நெட், டேட்டா இணைப்பு, ஏஐ, டேட்டா சென்டர், UnderSea Cable ஆகியவற்றைக் குறித்து அதிகம் பேசி வருகிறது.
ஹார்முஸ் நீரிணை வழியாக FALCON மற்றும் Gulf Bridge International ஆகிய 2 முக்கிய இண்டர்நெட் கேபிள் உள்ளது. இந்த 2 டிரில்லியன் டாலர் UnderSea கேபிள் மீது தாக்குதல் நடத்துவதிலும், இந்த கேபிளை பயன்படுத்தும் நிறுவனங்களிடம் கட்டணத்தை வசூலிப்பதிலும் ஈரான் அரசு குறியாய் உள்ளது.

இந்த நிலையில் இன்று வெளியான அறிவிப்பில், இனி வளைகுடா நாடுகள் என்விடியா, கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட், ஓபன்ஏஐ போன்ற ஏஐ மற்றும் டேட்டா நிறுவனங்களுக்கு உதவுவதை அனுமதிக்க முடியாது என்று ஈரான் எச்சரித்துள்ளது.
இந்த AI மற்றும் டேட்டா நிறுவனங்களுக்கு வளைகுடா நாடுகள் நிதி, நிலம் அல்லது எனர்ஜி போன்ற எந்த விதமான உதவிகளை வழங்கினாலும் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் ஈரான் தரப்பில் எச்சரித்துள்ளது.
ஈரான் நாட்டின் நாடாளுமன்றத் தலைவராகவும், அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தையில் முக்கிய நபராக இருக்கும் முகமது பாகர் காலிபாஃப் பேசுகையில், கூடிய விரைவில் Persian Gulf Data Authority என்ற ஒரு அமைப்பை உருவாக்க உள்ளோம். இந்த அமைப்பு மூலம் மத்திய கிழக்குப் பகுதியில் இருக்கும் டேட்டா, ஏஐ நிறுவனங்களை டார்கெட் செய்யவும், முடக்கவும் பயன்படுத்த உள்ளோம் எனத் தெரிவித்தார்.
மேலும் வளைகுடா நாடுகள் இனி எந்தவொரு AI அல்லது டேட்டா நிறுவனத்துக்கும் நிதி, பங்கு, நிலம், எனர்ஜி என எவ்விதமான உதவிகளையும் வழங்க வேண்டாம் என்று உத்தரவிடுகிறோம். இந்த அறிவிப்பை மீறி உதவினால், எங்களுடைய எதிர்வினைகளை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளார் முகமது பாகர் காலிபாஃப்.
இதைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், இனி வளைகுடா நாடுகள் அமெரிக்க ஏஐ மற்றும் டேட்டா அடிப்படையிலான நிறுவனங்களுக்கு உதவக் கூடாது, அவ்வாறு உதவினால் IRGC படைகள் மூலம் தாக்குதல் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார். இந்த ஒரு அறிவிப்பு மூலம் UAE அரசு OpenAI தலைமையில் உருவாக்கியுள்ள UAE'S Stargate project மொத்தமாகச் சீர்குலைக்கப்பட வாய்ப்பு உள்ளது.
ஈரான் ராணுவம் வளைகுடாவில் இருக்கும் டெக் கட்டமைப்புகளைத் தாக்குவதற்குத் துவங்கினால் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியாவில் செய்யப்பட்டுள்ள மொத்த தொழில்நுட்ப முதலீடுகளும் பாதிக்கப்படும்.
அமெரிக்கா - ஈரான் மத்தியிலான போரின் போது, அமெரிக்க ராணுவம் ஈரான் மீது சுமார் 14 டன் குண்டுகளை வீசியுள்ளது, இந்த தாக்குதல் மூலம் ஈரான் அரசு அமெரிக்கா எத்தகைய குண்டுகளைப் பயன்படுத்துகிறது, இதன் தொழில்நுட்பம், கெமிக்கல் காம்பினேஷன் என அனைத்தையும் அறிந்துகொண்டு உள்ளது.
இதனால் அமெரிக்கா மீண்டும் தாக்கினால் ஈரானின் உண்மையான பவரை காட்டத் தயாராக இருப்பதாக ஈரான் ஏற்கனவே தெரிவித்திருக்கும் வேளையில், இன்றைய அறிவிப்பு வளைகுடா நாடுகளில் இருக்கும் ஒட்டுமொத்த டெக் துறைக்கும், டெக் ஊழியர்களுக்கும் பயத்தை உண்டாக்கியுள்ளது.
ஈரான் எண்ணெய் கட்டமைப்புகள், வர்த்தக வழித்தடத்தைத் தாண்டி அமெரிக்காவுக்கும், வளைகுடா நாடுகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் திட்டத்துடன் தற்போது இறங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications

