நகர்ப்புறங்களில் வாழ்க்கைச் செலவுகள் தான் அதிகரிக்கிறது என்று பார்த்தால்.. வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளைப் பராமரிப்பதற்கான செலவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பிரீமியம் ரக உணவு, முறையான பராமரிப்பு மற்றும் மருத்துவச் செலவுகளுக்காக மாதம் தோறும் ஆயிரக்கணக்கில் பணம் செலவாகிறது. பல குடும்பங்களில் பெட் ஓனர்கள் தங்கள் வளர்ப்பு பிராணிக்காக செலவழிக்கும் பணம்.. தனியார் பள்ளியின் கல்விக் கட்டணத்தை மிஞ்சும் அளவுக்கு இருப்பதாக கூறப்படுகிறது.
நாய் குட்டிகளின் வகைகளுக்கு ஏற்ப மாறுபடும் பராமரிப்புச் செலவுகள்: பெரும்பாலான பெட் ஓனர்கள் நாய் குட்டிகளை விரும்பித் தத்தெடுத்து வளர்க்கின்றனர். அப்படி தத்தெடுக்கப்படும் நாய்க் குட்டிகளுக்கு அதன் அளவைப் பொறுத்து செலவு செய்ய வேண்டியுள்ளது. பொமரேனியன் மற்றும் ஷிஹ் ட்ஸூ போன்ற நாய் குட்டிகளுக்கு மாதா மாதம் ரூ. 4,000 முதல் ரூ. 8,000 வரை செலவாகிறது. பீகிள் போன்ற நாய் குட்டிகளுக்கு மாதம் ரூ.6,000 முதல் ரூ.10,000 வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. லாப்ரடார் மற்றும் கோல்டன் ரெட்ரீவர் போன்ற வகைளுக்கு மாதத்திற்கு ரூ.8,000 முதல் ரூ.14,000 வரை தேவைப்படுகிறது.

இதைத் தாண்டியும் சில பிரீட் இருக்கிறது. அதற்கு மாதத்திற்கு ரூ.12,000 முதல் ரூ.20,000 வரை செலவாகும். உதாரணமாக கிரேட் டேன் போன்ற பிரம்மாண்ட பிரீடுகளுக்கு இந்த செலவு பொருந்தும். இப்படி பெட் ஓனர்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சமாக அவற்றை பராமரிப்பதற்காகவே ரூ.2.4 லட்சம் வரை செலவு செய்கின்றனர் என்று தெரியவந்துள்ளது.
இந்த பெட் ஓனர்கள் செய்யும் செலவு பல சிறுநகரங்களில் உள்ள பள்ளி கட்டணம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள தனியார் பள்ளி கட்டணத்திற்கு நிகராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுவும் பெரிய ரக நாய்க்குட்டிகளுக்கு உணவுக்கே மாதத்திற்கு ரூ.6,000 முதல் 10,000 வரை செலவாகிறது.
இன்னும் சொல்லப்போனால் இந்தத் தொகை ஒரு சில குடும்பங்களின் மாதாந்திர மளிகை சாமான் செலவுக்கு சமமாக உள்ளது. ஃபாரின் பிரீடாக இருந்தால் அவற்றை சலூன் கூட்டிச் சென்று பராமரிப்பதற்கான செலவுகள் ரூ.1500 முதல் ரூ.3000 வரை இருக்கிறது.
அவற்றை குளிப்பாட்டி, நகம் வெட்டி, ஸ்பா சேவைகள் செய்வதும் இதில் அடங்கும், இதைத்தவிர தடுப்பூசி, குடற்புழு நீக்கம், அவசர கால சிகிச்சை, காப்பீடு ஆகிய மருத்துவ செலவுகளுக்கும் பெட் ஓனர்கள் அதிகம் செலவு செய்கின்றனர்.
தங்கள் தனிமையை போக்குவதற்காக தான் சிலர் செல்ல பிராணிகளை வளர்க்கத் தொடங்குகின்றனர். ஆனால் காலப்போக்கில் தங்களுடைய பிசியான வாழ்க்கைச் சூழலுக்கு மத்தியில் அவற்றுக்காக தனியாக நேரம் ஒதுக்க முடியாமல் தங்களால் முயன்ற ஆடம்பர பொருட்களை வாங்கித் தந்து அன்பை காட்டுகின்றனர். இதுவும் செலவுகள் தொடர்ந்து அதிகரிப்பதற்கு ஒரு காரணமாக அமைகிறது.
செலவுகளைக் குறைக்க என்ன செய்யலாம்?: விலங்கியல் மருத்துவரிடம் பேசி பிரீமியம் உணவுக்கு பதிலாக ஆரோக்கியமான உணவு முறையை கடைபிடிக்கலாம். அதே நேரம் நாய் குட்டிகளுக்கு செய்ய வேண்டிய இதர விஷயங்களை எல்லாம் வீட்டிலேயே செய்யலாம். உதாரணமாக குளிப்பாட்டுவது, பிரஷ் செய்வது மற்றும் பிற பராமரிப்பு விஷயங்களை எல்லாம் வீட்டில் செய்வதன் மூலம் சலூன் செலவை குறைக்க முடியும்.
ஒரு செல்லப் பிராணியை தேர்ந்தெடுப்பதற்கு முன்பே அவற்றுக்கான எதிர்கால செலவுகள் எப்படி இருக்கும் என்பதை யோசித்து முடிவு எடுக்க வேண்டும். அவற்றுக்கு ஆடம்பர செலவுகள் செய்வதைவிட உண்மையான தேவை என்ன என்பதை தெரிந்து கொண்டு செலவு செய்ய வேண்டும். அயல்நாட்டு நாய்க்குட்டிகளுக்கு பதிலாக சிப்பிப்பாறை போன்ற இந்திய ரக இனங்களை தேர்ந்தெடுத்து வளர்க்கலாம்.


Click it and Unblock the Notifications
