ஈரான் போர் உலக அளவில் பெரிய அளவிலான எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை தனக்கு தேவையான கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி உள்ளிட்ட எரிபொருட்களை வளைகுடா நாடுகளில் இருந்து தான் வாங்குகிறது. கச்சா எண்ணெய்க்கு நாம் இறக்குமதியை தான் சார்ந்து இருக்கிறோம்.
இந்தியாவை சேர்ந்த பொதுத்துறை மற்றும் தனியார் எண்ணெய் நிறுவனங்கள் வளைகுடா நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி அவற்றை பெட்ரோல் டீசல் ஆக சுத்திகரித்து நமக்கு விற்பனை செய்கின்றன. அந்த வகையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏறும்போதெல்லாம் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயரும். ஆனால் கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் பெட்ரோல் ,டீசல் விலை உயர்த்தபடவே இல்லை. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக ஒரே விலையில் தான் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த சூழலில் தான் ஈரான் போர் பெரிய முட்டுக்கட்டையாக வந்து நின்றது. பிப்ரவரி 28ஆம் தேதி ஈரான் போர் தொடங்கியது முதல் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் வரவில்லை. இந்தியா இதற்கு மாற்றாக ரஷ்யா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து எண்ணெய் வாங்கினாலும் ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து கிடைக்கக்கூடிய கச்சா எண்ணெய் தான் இந்திய நிறுவனங்கள் எளிமையாக சுத்திகரித்து , பெட்ரோல் டீசல் ஆக மாற்றுவதற்கான அமைப்பைக் கொண்டவையாக இருக்கின்றன. ரஷ்யா மற்றும் அமெரிக்கா கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதற்கு வழக்கத்தை விட கூடுதலாக செலவு செய்ய வேண்டி இருக்கிறது.
ஈரான் போர் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் பல மடங்கு உயர்ந்து விட்டது. ஈரான் போர் தொடங்குவதற்கு முன்னர் உலக சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 80 டாலர்களாக தான் இருந்தது ஆனால் தற்போது 126 டாலர்களாக உயர்ந்து விட்டது. இந்திய நிறுவனங்கள் அவற்றை வாங்கும்போது கிட்டத்தட்ட 160 டாலர்களாக கிடைக்கிறது. ஈரான் போர் அத்தனை விரைவில் முடிவுக்கு வருவதாக தெரிவதில்லை.

எண்ணெய் நிறுவனங்கள் 2 மாதங்களாக நஷ்டத்தில் தான் தொழில் புரிகின்றன. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹெச்பி ஆகியவை ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் விற்பனையிலும் 20 ரூபாயும் டீசல் விற்பனையில் 100 ரூபாயும் நஷ்டத்தை சந்திக்கின்றன. இரண்டு மாதங்களாக இந்த நஷ்டத்தை ஏற்று கொண்டிருக்கும் பொது துறை எண்ணெய் நிறுவனங்கள் நிலைமை கைமீறி போவதாக அரசுக்கு கூறி வருகின்றன. எனவே பிரச்சினையை சமாளிக்க பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதை தவிர வேறு வழியே இல்லை என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் அரசு தரப்பிலும் விரைவில் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படும் என தகவல் தெரிவித்திருப்பதாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறுகிறது. ஈரான் போருக்கு பின்னர் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலை கடந்த மாதம் 60 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதே வேளையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை அடுத்தடுத்து உயர்ந்து 3000 ரூபாயை கடந்து விட்டது. இதனால் உணவகங்களில் உணவுகளின் விலையும் டீ, காஃபி ஆகியவற்றின் விலைகளும் உயர்ந்துள்ளன.
விரைவில் பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்தால் மக்களின் பாக்கெட் வெகுவாக பதம் பார்க்கப்படும். பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு உயர்த்தப்பட்டாலும் உடனடியாக அதன் தாக்கம் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் மீது இருக்கும். காய்கறி, பால் ஆகியவை கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு லாரிகள் மூலமாகவே கொண்டுவரப்படுகின்றன. எனவே பெட்ரோல் , டீசல் விலை உயரும் போது இவற்றை கொண்டு வருவதற்கான போக்குவரத்து செலவு உயர்வதால் காய்கறிகள் மற்றும் பால் விலை உயரும்.
அதேபோல அரிசி, பருப்பு ,சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்களை கொண்டு வருவதற்கான செலவும் உயர்வதால் அவற்றின் சில்லறை விற்பனை விலை கூடும். ஆட்டோ ,டாக்ஸி பேருந்து உள்ளிட்டவற்றின் கட்டணங்கள் உடனடியாக உயர்த்தப்படும். வீடு கட்டுமான பொருட்கள் விலை கூடும். சரக்கு போக்குவரத்து கட்டணம் உயர்வதால் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்புவில் தொடங்கி பல பொருட்களின் விலை உயரும்.


Click it and Unblock the Notifications

