ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை 10 நாட்களில் மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. பிப்ரவரி 28ஆம் தேதி ஈரான் போர் தொடங்கியது. இதனை அடுத்து ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டது. இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வரத்து நின்று போனது.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் வரத்து நின்று போனதால் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இருந்தாலும் ஹெச்பி, பாரத் பெட்ரோலிய, இந்தியன் ஆயில் ஆகிய பெட்ரோல் விற்பனை செய்யும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இரண்டரை மாதங்களாக பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தாமலேயே இருந்தன. ஆனால் நஷ்டம் அதிகரித்ததால் நாடு முழுதும் பெட்ரோல், டீசல் விலை கடந்த 15ஆம் தேதி முதன்முறையாக உயர்த்தப்பட்டது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.14 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 3.11 ரூபாயும் அதிகரித்தன. ஈரான் போர் சூழல் காரணமாக எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதால் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயரும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து இருந்தனர். முன்னதாக பிரதமர் மோடி கூட மக்கள் பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் அதிகளவில் பேருந்து , ரயில்களை பயன்படுத்த வேண்டும் என மக்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
திடீரென பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.14 ரூபாயும், டீசல் விலை 3.11 ரூபாயும் உயர்த்தப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் பால், பிரெட் என பல பொருட்களின் விலைகள் உயர்ந்தன. இந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்குள் மே 19ஆம் தேதி 2வது முறையாக பெட்ரோல் லிட்டருக்கு 87 காசுகளும், டீசல் லிட்டருக்கு 91 காசுகளும் அதிகரித்தன. ஈரான் போரின் மோசமான விளைவுகளை இந்திய மக்கள் எதிர்கொள்ள தொடங்கியதன் அறிகுறிதான் இது.
இத்துடன் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில் 10 நாட்களில் மூன்றாவது முறையாக இன்றைய தினம் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.
இதன்படி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 87 காசுகள் உயர்ந்து 105.31 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 91 காசுகள் உயர்ந்து 96.98 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது இந்த 10 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 4.81 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4.93 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பால், காய்கறி, வாடகை கார், வாடகை ஆட்டோ, ஸ்விக்கி, சோமேட்டோ ஆர்டர் என பலவற்றுக்கும் இனி நாம் கூடுதலாக விலை கொடுக்க வேண்டி இருக்கும்.


Click it and Unblock the Notifications

