இந்தியாவில் 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான முதல் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் விலை ஏற்றத்திற்கு விடுமுறை அளித்த எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் திங்கட்கிழமை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியுள்ளது.
இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின் மூலம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 23 பைசா உயர்ந்து 93.38 ரூபாய்க்கும், டீசல் விலை 31 பைசா உயர்ந்து 86.96 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மே 4ஆம் தேதி முதல் தொடர்ந்து உயர்ந்து வருவதன் மூலம் டீசல் விலை லிட்டருக்கு சுமார் 1.21 ரூபாய் அதிகரித்துள்ளது, இதேபோல் பெட்ரோல் விலை லிட்டருக்கு 95 பைசா வரையில் உயர்ந்துள்ளது.
இன்று அறிவிக்கப்பட்ட உயர்வின் மூலம் நாட்டின் பல பகுதிகளில் ப்ரீமியம் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்று, வர்த்தகப் பாதிப்பு, வருமான பாதிப்பு எனப் பல விதமாக மக்கள் பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை பெரும் சுமையாக மாறியுள்ளது.
இதேவேளையில் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏதுமில்லாமல் நிலைப்பெற்று உள்ளது. இதன் மூலம் WTI கச்சா எண்ணெய் விலை 65.25 டாலராகவும், பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 68.71 டாலருக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் விலையை நிர்ணயம் செய்யும் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து வலிமை அடைந்து வருகிறது. மே 4ஆம் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 73.78 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 73.31 ரூபாயாக வலிமை அடைந்துள்ளது.
இப்படிக் கச்சா எண்ணெய் விலை, டாலர் மதிப்பு ஆகிய இரண்டும் இந்தியாவிற்குச் சாதகமாக இருந்த வேளையிலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது.


Click it and Unblock the Notifications