இந்தியாவில் கொரோனா 2வது அலை மிகவும் மோசமாகப் பாதித்து வரும் நிலையில் நாடு முழுவதும் மாநில அரசுகள் கடுமையான கட்டுப்பாடுகள் உடன் முழு லாக்டவுன் அறிவித்து வரும் காரணத்தால், பொருட்கள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே கொரோனா தொற்றால் நாட்டின் வர்த்தகம், உற்பத்தி வேலைவாய்ப்பு என அனைத்தும் பாதித்துள்ள நிலையில், இதை மேலும் மோசமாக்கும் வகையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் விலை மே 4ஆம் தேதி முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் முழு லாக்டவுன் மூலம் வீட்டில் முடங்கியிருக்கும் மக்கள் வாங்கும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
5 மாநில தேர்தல்
இந்தியாவில் 5 மாநில தேர்தல் முடிந்து, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்யும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் கண்ணை மூடிக்கொண்டு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது. ஆனால் தேர்தலுக்கு முன்பு ஒரு பைசா கூட உயர்த்தவில்லை.
எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள்
இந்நிலையில் இன்று மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் மூலம் பெட்ரோல் விலை நாட்டின் பல பெரு நகரங்களில் வரலாற்று உச்சத்தை அடைந்துள்ளது.
சென்னை பெட்ரோல், டீசல் விலை
இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 22 பைசா உயர்ந்து 93.84 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் விலை ஒரு லிட்டர் 87.49 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பிற முக்கிய நகரங்கள்
டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 92.05 ரூபாய்க்கும், மும்பையில் 98.36 ரூபாய்க்கும், கொல்கத்தாவில் 92.16 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் ஒரு லிட்டர் டெல்லியில் 82.61 ரூபாய்க்கும், மும்பையில் 89.75 ரூபாய்க்கும், கொல்கத்தாவில் 85.45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை
இதற்கிடையில் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் ஒரு பேரல் அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் 0.21 சதவீதம் அதிகரித்து 65.42 டாலருக்கும், பிரென்ட் கச்சா எண்ணெய் 0.12 சதவீதம் அதிகரித்து 68.63 டாலருக்கும், இதேபோல் சவுதி கச்சா எண்ணெய் 66.72 டாலருக்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
ரூபாய் - டாலர் மதிப்பு
இதேபோல் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 73.38 ரூபாயில் இருந்து 73.50 ரூபாய் வரையில் சரிந்துள்ளதால், இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் மத்திய அரசும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த எவ்விதமான நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்கவில்லை.


Click it and Unblock the Notifications