இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து பொதுமக்களிடையே மீண்டும் அச்சம் அதிகரித்து வரும் நிலையில், ஆனந்த் ஸ்ரீனிவாசன் வெளியிட்டுள்ள முக்கிய கருத்துக்கள் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்திருப்பது, இந்தியாவின் எரிபொருள் விலை அமைப்பில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு 156 டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விலை உயர்வை முழுமையாக ரீடைல் சந்தையில் மாற்ற வேண்டுமெனில், இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை குறைந்தது ரூ.40 வரை அதிகரிக்க வேண்டிய நிலை உருவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவே பொதுமக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் பெட்ரோலியம் பிளானிங் அண்ட் அனலிசிஸ் செல் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவல் படி மார்ச் மாதம் முழுவதும் வாங்கப்பட்ட ஸ்வீட் மற்றும் சோர் கச்சா எண்ணெய்களின் சராசரி விலை ஒரு பேரல் 117.09 டாலராகும். மார்ச் 19ஆம் தேதி வாங்கப்பட்ட கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 156.29 டாலர் என அறிவித்துள்ளது.

வரி குறைத்தாலும் சுமை நீங்குமா?
மத்திய அரசு பொதுவாக எக்சைஸ் வரி (Excise Duty) குறைப்பதன் மூலம் விலையை கட்டுப்படுத்தும் முதல்கட்டமாக முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அதனால் பொதுமக்களின் செலவில் பெரிய மாற்றம் ஏற்படாது. ஆனால் கச்சா எண்ணெய் விலை உயர்வு மிகப் பெரிய அளவில் இருப்பதால், வரி குறைப்பின் வாயிலாக செய்யப்படும் விலை குறைப்பு போதாது என கணிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு முக்கிய காரணம் ஈரான் மீதான போர் முடியும் என்ற சூழ்நிலையில் தென்படவில்லை என்பதால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்வ்து 150 முதல் 200 டாலர் வரையில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கலால் வரி குறைத்தால் மட்டும் போதாது, தற்போதை விலை நிலையில் தொடர்ந்து தக்க வைக்க வேண்டும் என்றால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் நிதி இழப்பீட்டை ஈடுக்கட்ட வேண்டும்.
11 ஆண்டுகளில் முதல் பெரிய சவால்?
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு, இது கடந்த 11 ஆண்டுகளில் உருவாகும் முக்கியமான பொருளாதார சவாலாக பார்க்கப்படுகிறது. இதற்கு முன் இதேபோன்ற சூழ்நிலையை அட்டல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் மன்மோகன் சிங் தலைமையிலான அரசுகள் சந்தித்துள்ளன.
'ஆயில் பாண்ட்' முறை
இந்த மாதிரியான எரிபொருள் விலை நெருக்கடியை சமாளிக்க, முந்தைய அரசுகள் "ஆயில் பாண்ட்" (Oil Bonds) என்ற முறையை பயன்படுத்தின. இதன் மூலம், அரசு சந்தையில் பத்திரங்களை விற்பனை செய்து கடன் வாங்கி, அந்த தொகையை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கும். அதன் மூலம், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உடனடியாக உயர்த்தாமல் கட்டுப்படுத்த முடியும். இதனால் பொதுமக்களுக்கு நேரடி விலை சுமை குறைக்கப்பட்டது.
ஆயில் பாண்ட் கடன்
இதற்கு முன்பு மத்திய அரசுகள் விற்கப்பட்ட ஆயில் பாண்ட் கடன்களின் மொத்தம் சுமார் ரூ.3.23 லட்சம் கோடி எனக் கூறப்படுகிறது. மோடி தலைமையிலான தற்போதைய அரசு, இந்த ஆயில் பாண்ட் கடன்களை முழுமையாக மார்ச் 2026 ஆண்டுடன் முடித்துவிட்டதாக தெரிவித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீதான வரி, செஸ் மற்றும் எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட டிவிடெண்ட் ஆகியவற்றின் மூலம் மத்திய அரசு இந்த கடனை முழுமையாக முடித்துள்ளது.
பொதுமக்களுக்கு என்ன பாதிப்பு?
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு நேரடியாக போக்குவரத்து செலவை உயர்த்தும். அதன் தாக்கம் உணவு பொருட்கள், தினசரி பயன்பாட்டு பொருட்கள் உள்ளிட்ட அனைத்திலும் விலையேற்றமாக எதிரொலிக்கமாகும். குறிப்பாக Tier-2, Tier-3 நகரங்களில் வாழும் மக்களுக்கு இது அதிக சுமையை ஏற்படுத்தக்கூடியது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு தொடர்ந்தால், இந்திய அரசு எவ்வாறு இந்த நெருக்கடியை சமாளிக்கும் என்பது மிக முக்கியமான கேள்வியாக மாறியுள்ளது. நேரடியாக விலையை உயர்த்துமா, அல்லது ஆயில் பாண்ட் போன்ற மாற்று வழிகளை மீண்டும் பயன்படுத்துமா என்பது விரைவில் தெரியும்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பு அமைச்சரவை குழு (Cabinet Committee on Security - CCS) அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையிலான இந்த கூட்டத்தில், உலகளாவிய நிலைமை குறித்தும், வளைகுடா நாடுகளின் மோதல் காரணமாக உலக பொருளாதாரத்தில் குறுகிய காலம், நடுத்தர காலம் மற்றும் நீண்ட காலத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications