சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் தினமும் விலை அதிகரித்து வரும் காரணத்தால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது.
மத்திய அரசு அதிக வரி வருமானத்திற்காகப் பெட்ரோல் மற்றும் டீசல் மீது அதிகளவிலான கலால் வரியை விதித்து வரும் வேளையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மக்களை அதிகம் பாதித்து வருகிறது.
கச்சா எண்ணெய் விலை
இதன் வாயிலாக அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலை 1 சதவீதம் அதிகரித்து 74.05 டாலருக்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. இதோடு பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.82 சதவீதம் வரையில் உயர்ந்து 76.18 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
இயற்கை எரிவாயு விலை
இதேவேளையில் இயற்கை எரிவாயு விலை 2.28 சதவீதம் அதிகரித்து 3.496 டாலராக உயர்ந்துள்ளது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் இந்த மாதம் சமையல் எரிவாயு விலையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு
பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாத கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் இன்று விலையை உயர்த்துள்ளது. இன்றைய விலை உயர்வின் மூலம் தமிழ்நாட்டில் பல இடங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தொட்டு உள்ளது.
தென்னிந்தியப் பகுதிகளில் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் கடந்த வாரமே 100 ரூபாயை தாண்டி பெட்ரோல் விலை இன்று தமிழ்நாட்டிலும் தாண்டியுள்ளது.
5 மாநில தேர்தல்
மே 4ஆம் தேதி, 5 மாநில தேர்தல் முடிந்த பின்பு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் இதுவரை 31 முறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது. இதற்கு முன்பு18 நாட்கள் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தும் போதும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மே 4ஆம் தேதிக்குப் பின்
இது ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஒவ்வொரு தேர்தலின் போதும் செய்யும் வேலை இது. இதேபோல் மே 4ஆம் தேதிக்குப் பின் பெட்ரோல் விலை 8.06 ரூபாயும், டீசல் விலை 8.37 ரூபாயும் அதிகரித்துள்ளது.
பெட்ரோல் விலை நிலவரம்
இன்றைய விலை உயர்வின் மூலம் இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நிலவரம்
சென்னை : 99.49 ரூபாய்
டெல்லி : 98.46 ரூபாய்
கொல்கத்தா : 98.30 ரூபாய்
மும்பை : 104.56 ரூபாய்
பெங்களூர் : 101.75 ரூபாய்
ஹைதராபாத் : 102.32 ரூபாய்
கோழிக்கோடு : 98.87 ரூபாய்
டீசல் விலை நிலவரம்
இன்றைய விலை உயர்வின் மூலம் இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒரு லிட்டர் டீசல் விலை நிலவரம்
சென்னை : 93.46 ரூபாய்
டெல்லி : 88.90 ரூபாய்
கொல்கத்தா : 91.75 ரூபாய்
மும்பை : 96.42 ரூபாய்
பெங்களூர் : 94.25 ரூபாய்
ஹைதராபாத் : 96.90 ரூபாய்
கோழிக்கோடு : 93.99 ரூபாய்


Click it and Unblock the Notifications