இன்று உலக மக்களையே ஆட்டிப்படைத்துக் கொண்டுள்ள கொரோனாவுக்கு இன்று வரையில், சரியான தடுப்பூசி கண்டுபிடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
சீனாவில் முதன் முதலாக தோன்றிய இந்த வைரஸ், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இன்று உலகின் பெரும்பாலான நாடுகளுக்கும் படையெடுத்துள்ளது.
உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் லட்சக்கணக்கானோர் பலியாகியும் உள்ளனர்..
கண்ணீர் வடிக்கும் சிவகாசி.. பட்டாசு வெடிக்கத் தடை உத்தரவால் தொழிற்சாலை மூடும் அபாயம்..!

தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சி
சுமார் 5 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா என்னும் கண்ணுக்கு தெரியாத நுண்கிருமியினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக ரஷியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன.

பரிசோதனை மூலம் சோதனை
சில தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு அவை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை முறையும் செய்யப்பட்டு வரும் நிலையில், பல நிறுவனங்கள் முன்னேற்றமும் அடைந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாகத் தான் அமெரிக்காவின் ஃபிப்சர் மருந்து நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் மருந்து நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கியுள்ளது.

முதல் இரண்டு கட்ட சோதனைகள் வெற்றி
இந்த தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தற்போது இறுதிகட்ட பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டணி நிறுவனங்களின் பரிசோதனையில் உலகின் பல நாடுகளை சேர்ந்தவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. மொத்தம் 43,538 பேர் தடுப்பூசி பரிசோதனைக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களில் நேற்றுவரை மொத்தம் 38,955 பேருக்கு இரண்டாவது முறையாக தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி 90% பாதுகாப்பு அளிக்கிறது
இதில் நல்ல விஷயம் என்னவெனில் ஃபிப்சர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி, 90 சதவீதம் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மனிதர்களை பாதுகாப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆக இதன் மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பக்க விளைவு இல்லை
இது தொடர்பாக ஃபிப்சர் நிறுவனத்தின் தலைவர் ஆல்பர்ட் போர்லா கூறுகையில், மனித குலத்திற்கும் அறிவியலுக்கும் இன்று மிகச்சிறந்த நாள். ஃபிப்சர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி கொரோனா பரவலை 90 சதவீதத்திற்கு அதிகமான அளவில் தடுக்கிறது. மேலும், இந்த தடுப்பூசியால் மிகப்பெரிய பக்க விளைவுகள் ஏற்படவில்லை என்பது தான் மிக நல்ல விஷயமே.
இதற்கிடையில் ஃபிப்சர் நிறுவனத்தின் (Pfizer Ltd) பங்கு விலை 0.15% சரிந்து 4,923 ரூபாயாக இந்திய சந்தையில் முடிவடைந்துள்ளது.