ஃபிலிப்பைன்ஸ் உலகில் முதல் நாடாக ஈரான் போர் காரணமாக தேசிய எரிசக்தி அவசர நிலையை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு செவ்வாய்க்கிழமை அந்நாட்டின் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் வெளியிட்ட உத்தரவின் மூலம் வந்துள்ளது. உலகம் முழுவதும் எனர்ஜி லாக்டவுன் குறித்து பேசி வரும் வேளையில் ஃபிலிப்பைன்ஸ் இதை நடைமுறைப்படுத்தியுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் கச்சா எண்ணெய் விநியோகம் மிகவும் குறைந்து வருவதால் எரிசக்தி விநியோகம் கடுமையாகக் குறையும் ஆபத்து இருப்பதாக அந்நாட்டின் அதிபர் தெரிவித்து மக்களுக்கு அவசர நிலையை அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஃபிலிப்பைன்ஸ் அரசு மக்களுக்கு எரிசக்தி விநியோகத்தை நிலையாக வைத்திருக்கவும், பொருளாதார நடவடிக்கைகள் தொடரவும், அத்தியாவசிய சேவைகள் சீராக கிடைக்க செய்யவும் Emergency நடவடிக்கைகள் தேவை என்று அறிவித்துள்ளார் அதிபர் மார்கோஸ்.

ஃபிலிப்பைன்ஸின் உண்மையான நிலை
ஃபிலிப்பைன்ஸ் தனது கச்சா எண்ணெய் தேவையில் கிட்டத்தட்ட 98 சதவீதத்தை வளைகுடா பகுதியிலிருந்து இறக்குமதி செய்கிறது. ஈரான் போர் பிப்ரவரி 28 அன்று தொடங்கியதில் இருந்து இந்நாட்டில் டீசல் மற்றும் பெட்ரோல் விலை இரண்டு மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது.
மார்ச் 20 வெளியான அறிவிப்பின் படி இந்நாட்டில் வெறும் 45 நாட்கள் மட்டுமே எண்ணெய் இருப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தப் பற்றாக்குறை தொடர்ந்தால் பொருளாதாரம் மற்றும் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும் என்ற அச்சம் நாடு முழுவதும் பரவியுள்ளது.
ஆசியக் கண்டம் முழுவதும் தற்போது பெரிய எரிசக்தி நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது, இவை அனைத்திற்கும் காரணம் விளைகுடா பகுதியில் சப்ளை இல்லாதது தான். இந்தச் சூழலில் ஃபிலிப்பைன்ஸ் போன்ற இறக்குமதியை முழுமையாக நம்பியுள்ள நாடுகள் மிகுந்த பாதிப்பை சந்திக்கின்றன. 3 நாடுகளுக்கு மத்தியிலான பிரச்சனை தற்போது உலகப் பொருளாதாரத்தையும் பாதிக்கும் காரணியாக மாறியுள்ளது.
அரசின் உடனடி உதவி
ஃபிலிப்பைன்ஸ் அரசு National energy emergency அறிவித்ததன் மூலம் அதிபர் மார்கோஸ் தலைமையிலான அரசு ஒரு சிறப்புக் குழுவை உருவாக்க உள்ளது. இந்தக் குழு எரிபொருள், உணவு, மருந்து, விவசாயப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் கிடைக்கும் தன்மையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க உள்ளது. அதே நேரத்தில் எரிசக்தி மேலாண்மை நடவடிக்கைகளையும், பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் தொழில் துறைகளுக்கு உதவிகளையும் மேற்பார்வையிடும்.

நிதியுதவி
மோட்டார் சைக்கிள் டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் பொது போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நாடு முழுவதும் 5,000 பெசோ (சுமார் 83 அமெரிக்க டாலர்) உதவித் தொகை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
இது அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் செய்யப்படும் நடவடிக்கையாகும்.
மானியம் இல்லை
மக்களுக்கு நேரடியாக உதவி தொகையை தரும் ஃபிலிப்பைன்ஸ் அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தடுக்கும் வகையில் பொதுவான எரிபொருள் மானியம் அல்லது விலை உறைப்பு எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதற்கு முக்கியமான காரணம் கச்சா எண்ணெய் விலையை நிர்ணயம் செய்வதில் ஃபிலிப்பைன்ஸ்-க்கு எவ்விதமான அதிகாரமும் இல்லை என்பதால் இத்தகைய நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
அண்டை நாடுகளான இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து போன்றவை பரந்த அளவில் எரிபொருள் மானியம் வழங்கி வரும் நிலையில் ஃபிலிப்பைன்ஸ் இதை செய்ய மறுத்துள்ளது.
நிலக்கரி
ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் எரிசக்தி செயலர் ஷாரன் காரின் தெரிவித்தபடி, எல்என்ஜி விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் அந்நாடு தற்காலிகமாக நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களை அதிக அளவில் நம்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மின் தேவையை ஓரளவு சமாளிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எண்ணெய் விநியோகத்தை அதிகரிக்க சீனா மற்றும் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால் நாட்டின் எரிசக்தி இருப்பு சற்று உயரும் என்ற நம்பிக்கை உள்ளது.

14 நாடுகள்
ஃபிலிப்பைன்ஸ் தாண்டி இலங்கை, மியான்மர், பூட்டான், ஸ்லோவாகியா, ஸ்லோவெனியா, தென் ஆப்பிரிக்கா, கென்யா, பாகிஸ்தான், லாவோஸ், வியட்நாம், நியூசிலாந்து, பங்களாதேஷ், எகிப்து, கம்போடியா ஆகிய நாடுகள் எரிபொருள் சார்ந்த பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
தற்போது நிலைமை மோசமாகும் பட்சத்தில் இது லாக்டவுன் ஆகவும் மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications