தற்போது ஆன்லைன் பேமெண்ட் தளங்கள் அதிகரித்துவிட்ட காரணத்தினால் சேமிப்பு பழக்கத்தை தாண்டி செலவு செய்யும் பழக்கம் அதிகரித்துள்ளது. சிறு பெட்டிக்கடைகளிலும் தற்போது பார்கோடை ஸ்கேன் செய்து பேமெண்ட் செய்கின்றனர். இந்நிலையில் ஃபோன்பே மைக்ரோ சேவிங்ஸ் பிளாட்ஃபார்மான ஜார் உடன் இணைந்து அதன் தளத்தில் புதிய "Daily Savings"-ஐ அறிமுகப்படுத்தவுள்ளது. இதன் மூலம் பயனர்கள் தினசரி 24 கேரட் டிஜிட்டல் கோல்டில் பணத்தை சேமிக்க முடியும் என்று முன்னணி ஃபின்டெக் நிறுவனமான ஃபோன்பே ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த புதிய ஆப்ஷன் மூலம் பயனர்கள் டிஜிட்டல் கோல்டில் ஒரு நாளைக்கு ரூ.10 முதல் சேமிக்க முடியும். அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ரூ.5000 வரை முதலீடு செய்யலாம். இது தனி நபர்களுக்கு நிலையான சேமிப்பு பழக்கத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 45 வினாடிகளுக்குள் டிஜிட்டல் தங்க முதலீட்டு செயல்முறையை செய்யலாம் என்று நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

இன் ஆப் பிரிவுகளின் தலைவர் நிஹாரிகா சைகல் கூறுகையில், "சமீபத்திய ஆண்டுகளில் எங்கள் தளத்தில் டிஜிட்டல் தங்கத்தை ஏற்றுக்கொள்வதில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை நாங்கள் கண்டுள்ளோம். தினசரி சேமிப்பை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், 24K டிஜிட்டல் கோல்ட் மூலம் தினசரி சேமிப்பை எளிதாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறிய அளவில் தொடங்கி, தொடர்ந்து சேமிப்பதன் மூலம், தனிநபர்கள் தங்கள் நிதி இலக்குகளை அடைவதற்கு படிப்படியாக முயற்சி செய்யலாம்.
பாதுகாப்பான டிஜிட்டல் தங்கத்தை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு போன் பே சிறந்த ஆப்ஷனை வழங்க உள்ளது. இந்த கூட்டணி ஃபோன்பே-இன் 560+ மில்லியன் பதிவுசெய்யப்பட்ட பயனர்களை ஜாரின் கோல்ட் டெக் ஸ்டாக் உடன் இணைத்து சேமிப்பு பழக்கவழக்கங்களை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் பயனர்கள் எளிதாகவும் பாதுகாப்பாகவும் டிஜிட்டல் தங்கத்தை வாங்க முடியும். இது விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது பலர் அனைத்து முதலீட்டு திட்டங்களை பற்றி தெரிந்து வைத்திருந்தாலும் அவற்றுக்கென மாத மாதம் சிறு தொகையை முதலீடு செய்ய முடியாமல் இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் பட்ஜெட் குறைவாக இருப்பது, மற்றொன்று நேரமின்மை. இந்த இரண்டையுமே சரி செய்யும் வகையில் தற்போது போன் பே அப்ளிகேஷன் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய ஆப்ஷன் மூலம் 10 ரூபாய் முதல் சேமிக்க முடியும்.
இந்த புதிய அம்சம் பல போன் பே பயனர்களுக்கு உதவிகரமானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ஏர்டெல் டிஜிட்டல் பைனான்ஸ் நிறுவனமும் பிக்சட் டெபாசிட் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. தற்போது ஃபின்டெக் நிறுவனமான ஃபோன்பே சேமிப்பை ஊக்குவிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications