இந்தியாவின் முன்னணி ஆன்லைன் பேமெண்ட் நிறுவனமான போன்பே தனது வர்த்தகத்தை நாட்டின் சிறு, குறு நகரங்கள் கொண்டு சென்று பெரிய அளவில் விரிவாக்கம் செய்து இந்தியாவிலேயே அதிகளவிலான வர்த்தகத்தைப் பெறும் நிறுவனமாக உருவெடுக்க வேண்டும் எனத் திட்டமிட்டு அடுத்த 3 முதல் 6 மாதத்தில் சுமார் 700 ஊழியர்களைப் பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது.
கொரோனா காலத்தில் இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் பயன்பாடும் அதன் முக்கியத்துவத்தை மக்கள் அறிந்துள்ள இந்தச் சூழ்நிலையில் போன்பே-வின் வர்த்தக விரிவாக்கம் பெரிய அளவில் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
700 பேருக்கு வேலை
போன்பே நிறுவனத்தின் இப்புதிய வர்த்தகத் திட்டம் மற்றும் ஊழியர்கள் சேர்ப்பு குறித்து இந்நிறுவனத்தின் தலைமை மக்கள் அதிகாரியான மன்மீட் சந்து கூறுகையில், எங்கள் வர்த்தகத் திட்டங்களுக்காகவும், தேவைகளுக்காகவும் சுமார் 700 பேரைப் புதிதாகப் பணியில் சேர்க்கத் திட்டமிடப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார்.
இந்திய கிராமங்களுக்கு விரிவாக்கம்
மேலும் போன்பே நிறுவனத்தின் புதிய திட்டத்தில் படி தனது வர்த்தகத்தை இந்திய கிராமங்களுக்கு விரிவாக்கம் செய்யத் திட்டமிடப்பட்டு உள்ளதால், சேவை விரிவாக்க பணிகளுக்கு உள்ளூர் திறமைகளைப் பயன்படுத்த போன்பே முடிவு செய்துள்ளது. இதனால் கிராமங்கள், சிறு டவுன்கள், மாவட்டங்கள் வாரியாகப் போன்பே அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளது.
பல வேலைவாய்ப்பு
போன்பே தற்போது அறிவித்துள்ள 700 வேலைவாய்ப்புகளில் இன்ஜினியரிங் வேலைவாய்ப்பு மட்டும் அல்லாமல் பிஸ்னஸ் டெவலப்மென்ட், பிராடெக்ட் மேனேஜ்மென்ட், வியாபாரிகளைக் கைப்பற்றுதல், மார்கெட்டிங், பைனான்ஸ், லீகல் எனப் பல பிரிவுகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது போன்பே.
லாக்டவுன் காலம்
இந்த லாக்டவுன் காலத்திலும் போன்பே இணையம் வழியான தொடர்பில் சுமார் 500 பேரை பணியில் அமர்த்தியுள்ளது. இதன் மூலம் போன்பே நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கை 2,200 ஆக உயர்ந்துள்ளது. இதனால் இனி வரும் காலத்திலும் புதிய ஊழியர்களைச் சேர்ப்பதில் எவ்விதமான தடையும் இல்லாமல் பணிகளை வேகமாகச் செய்ய முடியும் எனப் போன்பே நம்புகிறது.
ஆப்லைன் வியாபாரிகள்
போன்பே தற்போதும் கிராமம் மற்றும் 2ஆம் தர நகரங்கள் பகுதியில் 1.30 கோடி ஆப்லைன் வியாபாரிகளை வைத்துள்ள நிலையில், 2021ஆம் ஆண்டுக்குள் இதன் எண்ணிக்கையை 2.50 கோடியாக உயர்த்த வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இந்த முக்கிய இலக்கை அடைவதற்காகவே 700 ஊழியர்களைப் புதிதாக இணைக்கத் திட்டமிட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications