இந்தியாவில் விமானம் மற்றும் பாதுகாப்புத் துறை உற்பத்தி வேகமாக வளர்ந்து வரும் நிலையில், தமிழ்நாட்டின் ஓசூருக்கு மேலும் ஒரு முக்கிய முதலீட்டு வாய்ப்பு உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் இருந்து தமிழ்நாடு அரசு தற்போது உயர் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தனிப்பட்ட கவனத்தை செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இங்கிலாந்தின் முன்னணி விமான மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்ப நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் உயர்மட்ட குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தை, இந்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் உயர்மட்ட குழு
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் தலைமை டிரான்ஸ்பார்மேஷன் அதிகாரி நிக்கோலா கிரேடி ஸ்மித் தலைமையிலான குழுவை சந்தித்து தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் ஏற்கனவே தமிழ்நாட்டில், குறிப்பாக ஓசூரை மையமாகக் கொண்டு ஏரோஸ்பேஸ் மற்றும் பாதுகாப்புத் துறை உற்பத்தியில் ஈடுப்பட்டு வருகிறது. எனவே, இந்தியாவில் மேம்பட்ட உற்பத்தித் திறனை விரிவுபடுத்துவது தொடர்பான இந்த பேச்சுவார்த்தை, ஓசூரில் புதிய முதலீடுகள் அல்லது தற்போதைய உற்பத்தி வசதிகள் விரிவடைவதற்கான வாய்ப்பை உருவாக்குமா என்ற கேள்வியை தொழில்துறை வட்டாரங்களில் எழுப்பியுள்ளது.
எனினும், ஓசூரில் புதிய ஆலை அல்லது புதிய முதலீடு குறித்து ரோல்ஸ் ராய்ஸ் அல்லது மத்திய அரசு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இந்தச் சந்திப்பின் போது, இந்தியா மேம்பட்ட உற்பத்தி மற்றும் பொறியியல் துறையில் உலகளாவிய மையமாக உருவெடுத்து வருவதாகவும், இந்தியா - இங்கிலாந்து விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (CETA) இரு நாடுகளுக்கும் புதிய முதலீடுகள், தொழில்நுட்ப கூட்டாண்மைகள் மற்றும் வலுவான விநியோகச் சங்கிலிகளை உருவாக்கும் வாய்ப்பை வழங்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தியா - இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம்
இந்தியா - இங்கிலாந்து CETA ஒப்பந்தம் ஜூலை 15ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தால், இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடுகள் அதிகரிப்பதோடு, உயர்தர உற்பத்தி, பொறியியல், ஏரோஸ்ரேஸ் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் தொழில்நுட்ப ஒத்துழைப்பும் விரிவடையும் என்று மத்திய அரசு நம்புகிறது.
இந்த ஒப்பந்தம் இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, உள்நாட்டு தொழில்களின் வளர்ச்சிக்கும் வணிக விரிவாக்கத்திற்கும் உதவும் என்றும் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டுக்கு கிடைக்குமா வாய்ப்பு?
ஓசூர் ஏற்கனவே வாகன உற்பத்தி, விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை நிறுவனங்களின் முக்கிய மையமாக வளர்ந்து வருகிறது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்துடன் நடைபெற்ற இந்த உயர்மட்ட ஆலோசனை, தமிழ்நாட்டின் மேம்பட்ட உற்பத்தித் துறைக்கு சாதகமான சிக்னலாக பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில், புதிய முதலீடு அல்லது உற்பத்தி விரிவாக்கம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை, ஓசூருக்கு புதிய திட்டம் உறுதி செய்யப்பட்டதாகக் கருத முடியாது.


Click it and Unblock the Notifications