உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை ஒளிமயமானதாக மாற்ற வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அத்தகைய ஒரு சிறந்த முதலீட்டு திட்டம் குறித்து தான் இந்தப் பதிவில் பார்க்கவுள்ளோம். இதில் முதலீடு செய்வதன் மூலம் உங்கள் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும்போது அவர்களுக்கு வலுவான நிதி அடித்தளத்தை அமைத்து கொடுக்க முடியும். அதுதான் என்பிஎஸ் வாத்சல்யா திட்டம்.
NPS வாத்சல்யா திட்டத்தில் குழந்தை சிறு வயதாக இருக்கும் போதே சேமிக்கத் தொடங்கினால் உங்கள் குழந்தையின் ஓய்வு காலத்திற்கு நல்ல வருமானத்தை வழங்க முடியும்.

NPS வாத்சல்யா திட்டம் என்றால் என்ன?: NPS வாத்சல்யா என்பது ஓய்வூதிய சேமிப்பு திட்டம் ஆகும். இந்தத் திட்டம் பிரத்யேகமாக 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காகவே கொண்டுவரப்பட்ட அரசாங்கத் திட்டம். குழந்தையின் சார்பில் அவர்களுடைய பாதுகாவலர்கள் அல்லது பெற்றோர்கள் இந்த கணக்கை திறந்து நிர்வகிக்கலாம். குழந்தை பிறக்கும் போதே அவர்களுக்கு தேவையான ஓய்வூதியத்தை சேமிக்க இந்தத் திட்டம் உதவிகரமானதாக இருக்கும்.
யார் NPS வாத்சல்யா கணக்கைத் திறக்கலாம்?: குழந்தையின் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் குழந்தையின் சார்பாக இந்த கணக்கைத் திறக்க முடியும். இந்தத் திட்டத்தை PFRDA அமைப்பு நிர்வகிக்கிறது. கணக்கு திறப்பதற்கு PFRDA பதிவு செய்யப்பட்ட சேவை மையங்கள் மற்றும் ஆன்லைன் இ-என்பிஎஸ் தளங்கள் மூலமாக கணக்கு திறக்கலாம்.
தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன?: உங்கள் குழந்தையின் பெயரில் NPS வாத்சல்யா திட்டத்தில் கணக்கு தொடங்க பின்வரும் ஆவணங்கள் தேவைப்படும். குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், பள்ளி டிரான்ஸ்ஃபர் சர்டிபிகேட், மெட்ரிகுலேஷன் சான்றிதழ், குழந்தையின் பாஸ்போர்ட், பான் கார்டு போன்றவை தேவைப்படும்.NPS வாத்சல்யா திட்டம் கடந்த ஜூலை 23-ஆம் தேதி என்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது.
NPS வாத்சல்யாவின் கீழ் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச முதலீடு: NPS வாத்சல்யா திட்டத்தின் கீழ் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் ஆண்டுக்கு ரூ. 1,000 முதல் முதலீடு செய்யலாம். மேலும் அதிகபட்ச முதலீட்டுக்கு உச்ச வரம்பு எதுவும் இல்லை. எனவே பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு சிறு தொகையிலிருந்து முதலீடு செய்ய முடியும்.
ஒரு குழந்தைக்கு கணக்கு தொடங்கி சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் கணக்கை நிர்வகிக்கும் போது, அந்தப் பாதுகாவலரின் கேஒய்சி ஆவணங்களையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும். குழந்தைக்கு நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சட்டப்பூர்வ பாதுகாவலராக இருந்தால் அவரை பாதுகாவலராக நீதிமன்றம் நியமித்தது தொடர்பான உத்தரவின் நகலை கேஒய்சி ஆவணங்களுடன் இணைத்து வழங்க வேண்டும். என்பிஎஸ் வாத்சல்யா கணக்கு தொடங்க மைனருக்கு வங்கி கணக்கு அல்லது மைனருடன் கூட்டு கணக்கு இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் 18 வயதுக்கு முன் பகுதியளவு பணம் எடுக்கும் போது கணக்கு தேவைப்படலாம்.
NPS வாத்சல்யா திட்டத்திலிருந்து விலகுதல்: சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, உங்கள் குழந்தைக்கு 18 வயதாகும் முன் NPS வாத்சல்யாவிலிருந்து தொகையை திரும்பப் பெறலாம். பதிவுசெய்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு, குழந்தை முதிர்வு வயதை அடையும் வரை, மொத்த பங்களிப்புத் தொகையில் 25% வரை நீங்கள் திரும்பப் பெறலாம். PFRDA வழிகாட்டுதல்களின்படி, கல்வி, குறிப்பிட்ட மருத்துவ சிகிச்சைகள் அல்லது இயலாமை ஆகியவற்றிற்காக 75 சதவீதம் வரை திரும்பப் பெறலாம்.


Click it and Unblock the Notifications