சர்வதேச அளவில் சுற்றுலா நகரமாக இருக்கும் துபாய் தற்போது முதலீட்டுக்கான நகரமாக மாறி வருகிறது. அண்மைக்காலமாக பல்வேறு இந்திய பணக்காரர்களும் துபாயில் வீடு வாங்குவது மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்வது உள்ளிட்டவற்றில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.
இந்தியர்கள் மட்டும் இன்றி பல்வேறு நாடுகளை சேர்ந்த பணக்காரர்களும் துபாயில் முதலீடு செய்வதை ஒரு பேஷனாக மாற்றியுள்ளனர். உண்மையில் துபாயில் செய்யப்படும் முதலீடு லாபகரமானதா? என்பது குறித்து அட்மாஸ்பியர் லிவிங் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சந்திப் அகுஜா தன்னுடைய கருத்துக்களை எக்னாமிக் டைம்ஸ் தளத்திற்கு வழங்கியுள்ளார்.

வரி செலுத்த வேண்டிய தேவையில்லை என்ற ஒரு காரணி தான் பெரும்பாலான இந்தியர்கள் துபாய் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்வதற்கு காரணமாக இருக்கிறது என கூறுகிறார். அதுமட்டுமின்றி ஆடம்பரமான வாழ்க்கைச் சூழல்கள் மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களின் சுற்றுலா மையமாகவும் இருப்பது மற்றொரு காரணம் என்கிறார் . துபாயில் சொத்து வரியோ அல்லது மூலதன ஆதாய வரியோ கிடையாது. இதனால் தான் பெரும்பாலான இந்திய பணக்காரர்கள் துபாயில் தங்களுடைய முதலீடுகளை மேற்கொள்கின்றனர்.
உலக அளவில் பாதுகாப்பான நகரம்,பல்வேறு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லக்கூடிய ஒரு நகரம் என்பதால் ரியல் எஸ்டேட் துறையில் அதிக அளவிலான முதலீட்டு வாய்ப்புகளை துபாய் வழங்குகிறது. துபாயில் செய்யப்படும் ரியல் எஸ்டேட் முதலீடுகள் நீண்ட கால அடிப்படையில் நல்ல லாபம் தரக்கூடியவையாக இருக்கின்றன எனக் கூறுகிறார்.
துபாயில் சொத்துக்களில் முதலீடு செய்பவர்களுக்கு அந்நாட்டு அரசு கோல்டன் விசா வழங்குகிறது. இதனால் பல்வேறு இந்தியர்களும் இதனை சாதகமான வாய்ப்பாக பார்க்கின்றனர்.
தங்களுடைய ஓய்வு காலத்தில் துபாயில் சென்று செட்டில் ஆகிவிடலாம் அல்லது தங்களின் பிள்ளைகளை பணி நிமித்தமாகவும் தொழில் நிமித்தமாகவும் துபாய்க்கு எளிதாக சென்று வரலாம் என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியர்கள் துபாயில் முதலீடு செய்கிறார்களாம். துபாயில் வாடகை வருமானம் என்பது ஆண்டுதோறும் 5 லிருந்து 9% வரை அதிகரிக்கிறதாம்.
குறிப்பாக டவுன்ட்டவுன் துபாய், துபாய் மரினா ஆகிய இடங்களில் செய்துள்ள ரியல் எஸ்டேட் முதலீடுகள் ஆண்டுதோறும் கணிசமான வருமானத்தை ஈட்டி தருகின்றன. அதேபோல இந்தியாவிலிருந்து மூன்றிலிருந்து நான்கு மணி நேரத்திலேயே விமானம் மூலம் துபாய்க்கு நாம் சென்று விட முடியும் என்பதால் இந்தியர்கள் எளிதாக சென்று வரக்கூடிய ஒரு நகரமாக இருப்பதும் ஒரு காரணம்.
ஆனால் துபாயில் சொத்து வாங்கும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என கூறுகிறார். துபாயில் சொத்து வாங்குவதற்காகவே உங்களுக்காக நிரந்தர குடியுரிமை கிடைத்துவிடும் என எண்ணி விடக் கூடாது, அதேபோல துபாய் அரசு முதலீட்டாளர்களுக்கு சாதகமான விசா நடைமுறைகளைக் கொண்டு இருந்தாலும் நீண்ட கால அடிப்படையில் அங்கே செட்டிலாவது சவாலானதாக இருக்கும் என கூறுகிறார்.
மேலும் முதலீடு செய்வதற்கு முன்பு குறிப்பிட்ட அந்த இடத்தில் சொத்துக்களின் வளர்ச்சி விகிதத்தை ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுரை வழங்குகிறார். சரியான இடத்தில் சரியான நிறுவனங்களிடமிருந்து இடங்களை வாங்க வேண்டும் எனக் கூறுகிறார்.
தன்னுடைய முதலீட்டு போர்ட்போலியோவை பன்முகத்தன்மை கொண்டதாக மாற்ற வேண்டும், சிறந்த வருமானம் ஈட்ட வேண்டும், ஓய்வு காலத்தில் ஆடம்பரமான வாழ்க்கை வாழ வேண்டும் என எண்ணும் இந்தியர்களுக்கு துபாயில் வீடு வாங்குவது சிறந்த முதலீட்டு வாய்ப்பாக இருக்கிறது என இவர் கூறுகிறார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications