இந்திய கார் விற்பனை சந்தைக்கு 2026ஆம் ஆண்டு வரலாற்றில் மிகவும் முக்கியமான ஆண்டாக மாற்றப்போகிறது. கடந்த 5 வருடத்தில் வர்த்தக சந்தையில் ஏற்பட்ட மாற்றங்கள் மூலம் மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் வர்த்தக பங்கீடு பெரிய அளவில் மாறியுள்ளது.
உதாரணமாக மாருதி சுசூகி 10 சதவீத சந்தை பங்கீட்டை இழந்துள்ளது, ஹூண்டாய் நிறுவனமும் கணிசமான வர்த்தகத்தை இழந்துள்ளது. இந்த இழப்பு டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா ஆகியவற்று வர்த்தகமாக மாறியுள்ளது.

இதனால் இந்த ஆண்டு டாப் 5 நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் மற்ற நிறுவனங்களும் மிகப்பெரிய திட்டத்துடன் களத்தில் இறங்கியுள்ளது. இந்திய சந்தையில் 2026ல் மட்டும் 30-க்கும் மேற்பட்ட புதிய வாகனங்களை அறிமுகம் செய்ய தயாராகி வருகின்றன. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமான எண்ணிக்கையாகும். கடந்த ஆண்டு GST குறைப்புக்கு பிறகு சந்தையில் டிமாண்ட் அதிகரித்துள்ள நிலையில் இந்த புதிய மாடல்களின் அறிமுகம் சந்தையை மேலும் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய அறிமுகங்கள் தொடக்கம்
ஜனவரி 26 அன்று ரெனால்ட் நிறுவனம் புதிய டஸ்டர் SUV-ஐ வெளியிடுகிறது. பிப்ரவரியில் மாருதி சுசூகி தனது முதல் எலக்ட்ரிக் வாகனமான e-Vitara SUV-ஐ விற்பனைக்கு கொண்டு வருகிறது. டாடா மோட்டார்ஸ் அடுத்த காலாண்டில் இரண்டு புதிய மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது. இதில் சியாரா ஈவி காரும் உள்ளது.
வியட்நாமின் VinFast நிறுவனம் மூன்று புதிய எலக்ட்ரிக் மாடல்களை கொண்டு வருகிறது. பிரான்ஸின் சிட்ரோயன் உடன் இணைந்த சீன நிறுவனமான Leapmotor இந்தியாவில் இந்த ஆண்டு பின்னர் நுழைந்து இரண்டு மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது. டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) ஒரு எலக்ட்ரிக் SUV-ஐ கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
மொத்தம் 31 புதிய வாகனங்கள் 2026-ல் சாலைகளில் இறங்க உள்ளன. 2025-ல் 19 மாடல்கள் மட்டுமே அறிமுகமாகின. 2021-ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 10-11 மாடல்கள் மட்டுமே வந்தன.
இந்த ஆண்டு அறிமுகமாகும் வாகனங்களில் எலக்ட்ரிக் கார்கள் முக்கிய இடம் பிடித்துள்ளன. எலக்ட்ரிக் SUVகள், புதிய மாடல்கள் ஆகியவை சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2025-ல் சந்தை வளர்ச்சி
கடந்த ஆண்டு டிசம்பரில் பயணிகள் வாகன விற்பனை வருடாந்திர அடிப்படையில் 27 சதவீதம் உயர்ந்தது. இதன் மூலம் 2025ல் மொத்த விற்பனை 5 சதவீதம் அதிகரித்து 44.9 லட்சம் வாகனங்கள் விற்கப்பட்டு சாதனை படைத்தது. செப்டம்பர் 22 முதல் GST குறைப்புக்கு பிறகு தொடர்ந்து 3 மாதங்களில் இரட்டை இலக்க வளர்ச்சி பதிவானது. விற்பனையில் SUVகள் 56 சதவீதம் பங்கு வகித்தன.
இந்த நிலையில் புதிய மாடல் கார்கள் அறிமுகம் செய்வது மூலம் இந்திய கார் சந்தையில் பெரும் போட்டியை உருவாக்கும். வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விருப்பங்கள் கிடைக்கும். எலக்ட்ரிக் வாகனங்களின் அதிகரிப்பு சுற்றுச்சூழல் நட்பு போக்குவரத்துக்கு உதவும். Tier 2, Tier 3 நகரங்களில் உள்ள மக்களுக்கு மலிவு விலை, நவீன வசதிகள் கொண்ட வாகனங்கள் கிடைக்கும்.
இதனால் புது கார் வாங்க திட்டமிட்டு உள்ளவர்கள் கொஞ்சம் வெயிட் செய்து, வாங்குவது உத்தமம்.


Click it and Unblock the Notifications