இந்தியாவில் பெரிய பண்டிகை கால விற்பனை முடிந்த நிலையில், ஒவ்வொரு கார் நிறுவனமாக தங்களுடைய கார்களின் விலையை உயர்த்தி வருகிறது. ஏற்கனவே மாருதி சுசூகி, தனது உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ள காரணத்தால் லாபத்தில் பாதிப்பு ஏற்படத் துவங்கியிருப்பதாக அறிவித்துக் குறிப்பிட்ட சில கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
இதை தொடர்ந்து தற்போது ஹூண்டாய், டாடா, ஆடி என அடுத்தடுத்து முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள் தங்களுடைய கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

ஹூண்டாய்
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் சில குறிப்பிட்ட கார் மாடல்களின் விலையை டிசம்பர் 1ஆம் தேதி முதல் 8000 ரூபாய் வரையில் அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. மாருதி சுசூகி போலவே ஹுண்டாயும் அனைத்து கார்களின் விலையை உயர்த்தாமல் குறிப்பிட்ட சில மாடல்களின் விலையை மட்டுமே உயர்த்தியுள்ளது.
டிசம்பர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் இப்புதிய விலை எந்த கார்களை பாதிக்கும் என்பதையும் தெரிவிக்கவில்லை. ஈரான் போருக்கு பின்பு பெட்ரோலியம் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்களின், உலோகம் விலை அதிகரித்துள்ளதால் அனைத்து கார் தயாரிப்பு நிறுவனங்களும் கூடுதல் செலவுகளை எதிர்கொண்டது.
இந்த செலவுகளை தீபாவளி பண்டிகை விற்பனைக்காகத் தக்க வைத்திருந்த நிலையில், தற்போது செலவின் சுமையை புதிய வாடிக்கையாளர்களிடம் பகிர்ந்துகொள்ள முடிவு செய்துள்ளது.
டாடா மோட்டார்ஸ்
ஹூண்டாய் நிறுவனத்தைத் தொடர்ந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் அனைத்து ICE இன்ஜின் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
ஹுண்டாய் போல் அல்லாமல் அனைத்து கார்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ள டாடா மோட்டார்ஸ் டிசம்பர் 1ஆம் தேதி முதல் 0.5 சதவீத விலை உயர்வை அமலுக்கு கொண்டு வருகிறது.
AUDI
இந்திய ஆடம்பர கார் பிரிவில் தொடர்ந்து தனக்கான இடத்தை விட்டுக்கொடுக்காமல் இருக்கும் ஆடி நிறுவனம் ஜனவரி 1ஆம் தேதி முதல் அனைத்து மாடல்களின் விலையை 2 சதவீதம் வரையில் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்த நவராத்திரி, தீபாவளி பண்டிகை காலத்தில் அதிகப்படியான வர்த்தகத்தை எதிர்பார்த்த நிலையில் கடந்த ஆண்டு பண்டிகால விற்பனையை காட்டிலும் 7.16 சதவீதம் குறைவான வர்த்தகத்தையே பதிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications