இன்றைய விலைவாசி உயர்வுக்கு மத்தியில், சொந்த வீடு வாங்க வங்கிகளே அதிகளவில் உதவி வருகின்றன. ஹோம் லோன், கார் லோன், எஜூகேஷன் லோன் என மக்கள் தங்களுக்கு தேவைப்படும் லோனை வங்கிகளின் மூலமாகவே பெறுகின்றனர். வீடு கட்ட ஹோம் லோன் பெறலாம், அதேபோல நிலம் வாங்க பிரத்தியேகமாக பிளாட் லோன்கள் வழங்கப்படுகின்றன.
வீடு, அப்பார்ட்மெண்ட் போன்றவற்றை சொந்தமாக்கிக் கொள்ள ஹோம் லோன் கிடைக்கிறது. நீங்கள் காலி மனையாக வாங்க வேண்டுமானால் அதற்கு பிளாட் லோன் வாங்கலாம். ஆனால் ஹோம் லோனுக்கும் இதற்கும் சில வித்தியாசங்கள் இருக்கிறது. வங்கிகள் மட்டுமின்றி சில நிதி நிறுவனங்களும் பிளாட் லோனை வழங்குகின்றன.
தகுதி: நீங்கள் பிளாட் லோன் பெற விண்ணப்பிப்பதற்கு முன்பு ஒரு சில விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். உங்களுக்கு வயது 21 முதல் 65 வயதுக்குள் இருந்தால் தாராளமாக நீங்கள் லோன் பெற விண்ணப்பிக்கலாம். நீங்கள் கண்டிப்பாக இந்தியாவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். மாதா மாதம் நிலையான வருமானம் பெறுபவராக இருக்க வேண்டும். இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக உங்களுடைய சிபில் ஸ்கோர் சிறப்பாக இருக்க வேண்டும். குறைவாக இருந்தால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது.
எவ்வளவு கடன் கிடைக்கும்?: இதற்கு கடன் கொடுக்கும் வங்கிகள் சில விதிமுறைகளை வகுத்துள்ளன. நீங்கள் பிளாட் லோன் பெறும்போது நீங்கள் வாங்கும் பிளாட்டின் விலையில் 75 சதவீதம் வரை கடனாகப் பெற முடியும். மீதமுள்ள தொகையை நீங்கள் தான் தயார் செய்ய வேண்டும். ஒருவேளை நீங்கள் கடனை கட்ட தவறும் பட்சத்தில் வங்கிகள் உங்களுடைய பிளாட்டை விற்று கடன் தொகையைப் பெற்றுக் கொண்டு மீதி தொகையை உங்களிடமே ஒப்படைப்பார்கள்.
ஆனால் இதெல்லாம் கடைசி நேரத்தில் வங்கிகள் எடுக்கும் நடவடிக்கை. ஒரு சில EMI-களை தவறவிடுவதால் எந்தப் பிரச்சனையும் இருக்காது. நீங்கள் அபராதத்தோடு திருப்பிச் செலுத்தி விட்டால் போதும். அதுவே நீங்கள் தொடர்ந்து 7, 8 ஈஎம்ஐ-களை தவறவிடும் பட்சத்தில் இது போன்ற நடவடிக்கை எடுக்கப்படலாம். மேலும் பிளாட் லோன்கள் குறுகிய கால அடிப்படையில் மட்டுமே வழங்கப்படுகிறது. நீங்கள் வெகு விரைவாக கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டி இருக்கும்.
வரிச் சலுகைகள்: ஹோம் லோனுக்கு கிடைப்பது போலவே பிளாட் லோனுக்கும் வரி விலக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கக் கூடாது. நீங்கள் காலி மனையாக வாங்கி, அதில் வீடு கட்டத் தொடங்கிவிட்டால் அப்போது வரிச் சலுகைகளை கோரலாம். ஆனால் இதற்கும் குறிப்பிட்ட காலக்கெடு இருக்கிறது.
வட்டி விகிதம்: ஹோம் லோன் போலல்லாமல் லேண்ட் லோனுக்கு வட்டி சற்று அதிகம் .உங்களுக்கு சிபில் ஸ்கோர் சிறப்பாக இருந்தால் சிறந்தவட்டியில் கடன் பெறலாம்.
எந்தெந்த இடங்களுக்கு உடனே லோன் கிடைக்கும்?: வங்கிகளைப் பொறுத்த வரையில் நகரங்களுக்குள் இருக்கும் ரெசிடென்சியல் பிளாட்டுக்கு உடனே அப்ரூவல் கொடுத்து விடும். மாறாக விவசாய நிலங்கள் மற்றும் இன்டஸ்ட்ரியல் பிளாட்களுக்கு லோன் கிடைப்பது சற்று கடினம். கிராமப்புறங்களை விட நகர்புறங்களில் இருக்கும் இடங்களை வாங்க சட்டென்று விண்ணப்பித்து கடன் பெறலாம். லோன் பெறுவதற்கு டிடிசிபி அப்ரூவல் மிகவும் முக்கியம். இது போன்ற இடங்களுக்கே வங்கிகள் முன்னுரிமை தருகிறது.
எந்த ஆவணங்கள் தேவை?: வழக்கம் போல உங்களுடைய ஆவணங்கள் அனைத்தும் துல்லியமாக இருந்தால் உடனே லோன் பெறலாம். ஆதார் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, கரண்ட் பில், பே ஸ்லிப், பேங்க் ஸ்டேட்மென்ட், வருமானவரி தாக்கல் செய்த சான்றிதழ், கிரைய பத்திரம், உங்கள் பிளாட்டின் ப்ளூ பிரிண்ட் ஆகியவை தேவைப்படும்.
இதைத் தவிர வங்கிகள் கொடுக்கும் அப்ளிகேஷன் ஃபார்மை வாங்கி பூர்த்தி செய்து வழங்க வேண்டும். லோன் பெறுவதற்கு முன்பு அந்த மனையின் உரிமையாளரைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இதில் ஏதேனும் குளறுபடி இருப்பது போல தெரிந்தால், ஒரு லாயரை அணுகி லீகலாக அந்த நிலத்தின் உரிமையாளர் யார்?, எவ்வளவு சதுர அடி இருக்கிறது?, நீங்கள் வாங்க இருக்கும் பகுதியில் ஒரு சதுர அடி மனையின் விலை எவ்வளவு?, நிலத்தை வாங்கி விட்டால் இனி வரும் காலங்களில் அதன் மதிப்பு அதிகரிக்குமா?, பக்கத்து பிளாட் உரிமையாளர்களுடன் ஏதேனும் பிரச்சனை ஏற்படுமா? என அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்டு லோன் பெறுங்கள்!
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications