வேலை நிமித்தமாக அமெரிக்கா செல்லக்கூடிய இந்தியர்கள் உட்பட ஏராளமான வெளிநாட்டவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு கிரீன் கார்டு விண்ணப்பம் செய்து அங்கேயே நிரந்தரமாக தங்கி விடுகின்றனர். இந்த கிரீன் கார்ட் என்பது வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் நிரந்தரமாக தங்குவதற்கான ஒரு அதிகாரப்பூர்வ ஆவணம் ஆகும்.
அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் இந்த கிரீன் கார்டு விண்ணப்பம் தொடர்பான நடைமுறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது. குறிப்பாக கிரீன் கார்டு வேண்டி விண்ணப்பம் செய்பவர்கள் விண்ணப்பம் நடைமுறையில் இருக்கக்கூடிய காலத்தில் தாய் நாட்டில் தான் இருக்க வேண்டும் அமெரிக்காவில் இருக்கக் கூடாது என கூறி இருக்கிறது.

இது தொடர்பாக அமெரிக்காவில் உள்நாட்டு பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள பதிவில் அமெரிக்காவில் தற்காலிகமாக இருக்கக்கூடிய ஒரு வெளிநாட்டு நபர் கிரீன் கார்டு வேண்டும் என்றால் தாய்நாடு திரும்பி அங்கிருந்து தான் விண்ணப்பம் செய்ய வேண்டும் என பதிவு செய்திருக்கிறது. தவறான வழிகளில் நம்முடைய குடியேற்ற அமைப்பு பயன்படுத்தப்படுவதை தடுக்கும் நோக்கில் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது என கூறி இருக்கிறது.
இதனை குறிப்பிட்டு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, அமெரிக்காவில் விசாவில் தங்கியிருக்கக்கூடிய அனைத்து இந்தியர்களுக்கும் மீண்டும் ஒருமுறை நான் கேட்டுக்கொள்கிறேன் தயவு செய்து தாயகம் திரும்பி வந்துவிடுங்கள் என அழைப்பு விடுத்துள்ளார். இது மிகவும் கடினமானது பல்வேறு தியாகங்களை நீங்கள் செய்ய வேண்டும் என்பதெல்லாம் இருந்தாலும் சுயமரியாதை முக்கியம். சுயமரியாதை தான் உங்களின் அடுத்த பாதையை தீர்மானிக்க வேண்டும் என கூறியுள்ளார். தாயகம் திரும்பி வந்து இந்த பாரதத்தை பெருமைப்படுத்துவோம் என அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். அவருடைய இந்த பதிவு ஆயிரக்கணக்கானவர்களின் கவனத்தை பெற்றிருக்கிறது.
ஸ்ரீதர் வேம்பு நீண்ட காலமாகவே அமெரிக்காவில் உள்ள இந்திய ஐடி ஊழியர்கள் தாயகம் திரும்பி இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என தொடர்ச்சியாக கோரிக்கை எடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது கிரீன் கார்டு விண்ணப்பம் தொடர்பான விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளதால் மீண்டும் ஒருமுறை அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றது முதலே குடியேற்ற விதிகளை கடுமையாக்கி இருக்கிறார். ஹெச்1பி விசா விண்ணப்பங்கள் கடினமானதாக மாற்றப்பட்டு விட்டன. வெளிநாட்டவர்கள் அமெரிக்கர்களின் வேலைகளை பறிக்கின்றனர், அமெரிக்க நிறுவனங்கள் குறைந்த சம்பளத்தில் வெளிநாட்டவர்களை வேலைக்கு எடுத்து அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பை மறுக்கின்றன என தொடர்ச்சியாக குற்றம்சாட்டப்படும் நிலையில் திடீரென கிரீன் கார்டு விதிகள் மாற்றப்பட்டுள்ளன.
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பான USCIS வெளியிட்ட புதிய வழிகாட்டுதலின்படி, கிரீன் கார்டுக்கான "அட்ஜஸ்மண்ட் ஸ்டேட்டஸ்" கோருபவர்கள் இனிமேல் அமெரிக்காவில் தங்கியபடி செயல்முறையை மேற்கொள்ள முடியாது. அதற்கு பதிலாக, தங்கள் தாய்நாடுகளிலிருந்தே விண்ணப்பிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications

