பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா- அர்பன் 2.0 திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஷ்வணி வைஷ்ணவ் கடந்த வாரம் தெரிவித்தார். இந்த திட்டத்தின்படி மூன்று கோடி கிராம மற்றும் நகர்ப்புற வீடுகள் ரூ.3,60,000 கோடி செலவில் கட்டப்படும். தகுதியுள்ள குடும்பங்களுக்கு இந்த வீடுகள் கட்டித் தரப்படும்.
கடந்த 10 ஆண்டுகளில் 4 கோடி வீடுகள் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு ஒரு சமூகப் புரட்சியை உண்டாக்கியது. 3 கோடி புதிய வீடுகள் கட்டுவது குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்றது. இது பிரதமர் மோடியின் தேர்தல் வாக்குறுதியில் ஒன்றாகும்.

இந்தத் திட்டத்துக்காக பட்ஜெட்டில் ரூ.3,60,000 கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 2 கோடி வீடுகள் கிராமப் புறத்திலும், 1 கோடி வீடுகள் நகர்ப்புறத்திலும் கட்டப்படும் என்று அமைச்சர் வைஷ்ணவ் தெரிவித்தார். இந்த வீடு கட்டுவதற்காக 1 லட்சம் நகர்ப்புற ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு குடும்பத்தினருக்கு 5 ஆண்டுகளில் நிதியுதவி அளிக்கப்படும்.
பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பங்கள், குறைந்த வருவாய் குடும்பங்கள், நடுத்தர வருவாய் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு வீடு வாங்குவதற்கு அல்லது கட்டுவதற்கு பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தின் கீழ் தகுதி பெற்று இத்திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படும்.
பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பங்கள் என்பது ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வருவாய் உடையவர்கள். குறைந்த வருவாய் குடும்பங்கள் என்பது ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வருவாய் உடையவர்கள், நடுத்தர வருவாய் குடும்பங்கள் என்பது வருடத்துக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வருவாய் உடையவர்கள் ஆவர்.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் இந்திய அரசின் முன்னோடி திட்டங்களில் ஒன்றாகும். இதன் மூலம் நகர்ப்புறங்களில் தகுதி வாய்ந்தவர்களுக்கு எல்லா சூழலுக்கும் ஏற்ற வீடுகள் கட்டிக்கொள்ள நிதியுதவியை மானியம் வாயிலாக வழங்கப்படும்.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 1.18 கோடி வீடுகள் கட்டுவதற்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. மேலும் 85.5 லட்சம் வீடுகள் ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி தனது ஆகஸ்ட் 15 சுதந்திர தின உரையில் வரும் ஆண்டுகளில் நலிவடைந்த பிரிவினருக்கும் நடுத்தர வகுப்பு குடும்பங்களுக்கும் சொந்தமாக வீடுகள் கட்டித் தரும் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தும் என அறிவித்தார்.
Story written by: Jayachandran


Click it and Unblock the Notifications