விருதுநகர்: இந்திய அளவில் ஜவுளி உற்பத்தியில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. இதனை மேலும் ஊக்குவிக்கும் பி எம் மித்ரா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் மாபெரும் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்கப்பட இருக்கிறது.
ஜவுளி பூங்கா: இந்த ஜவுளி பூங்கா தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்து இருக்கிறது. 1894 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விருதுநகரில் பி எம் மித்ரா ஜவுளி பூங்காவை அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் தந்திருக்கிறது என தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா தெரிவித்துள்ளார். தன்னுடைய எக்ஸ் பக்கத்திலும் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதற்கான படங்களை அவர் பகிர்ந்துள்ளார்.

சிப்காட்டில் கட்டுமான பணி: விருதுநகர் மாவட்டத்தின் குமாரலிங்கபுரத்தில் இருக்கும் சிப்காட் நிலத்தில் பிஎம் மித்ரா ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகளின் பங்களிப்பில் மாபெரும் ஜவுளி பூங்காவாக இது அமைய இருக்கிறது. நூற்பு, நெசவு பதப்படுத்துதல் மற்றும் அச்சிடுதல் என ஒரு ஆடை உற்பத்திக்கான அனைத்து தொழில்களும் இந்த ஜவுளி பூங்காவில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 லட்சம் வேலைவாய்ப்புகள்: இந்த பூங்காவை அமைப்பதற்காக தமிழ்நாடு அரசின் தொழில் முன்னேற்ற நிறுவனம் 1052 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்திருக்கிறது. இந்த ஜவுளி பூங்கா அமைக்கப்பட்டால் 1 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும். பட்டாசு உற்பத்தியை நம்பி இருக்கும் விருதுநகர் மாவட்ட மக்களுக்கு இந்த ஜவுளி பூங்கா புதிய வேலைவாய்ப்புகளையும் தொழில் வாய்ப்புகளையும் உருவாக்கி தரும்.
10,000 பேர் தங்கும் வகையில் விடுதி: பெண்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு உருவாக்கி தரக்கூடிய ஒரு பூங்காவாக இது இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த ஜவுளி பூங்காவில் தங்கி வேலை செய்வோரின் வசதிக்காக பத்தாயிரம் பேர் தங்கும் வகையிலான தங்கும் இட வசதியும் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ரூ.10,000 கோடி முதலீடுகள் ஈர்க்கப்படும்: பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் சாலை இணைப்புகள் என அடிப்படை வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தி தரும் என தமிழ்நாடு அரசுகள் சார்பில் கூறப்பட்டிருக்கிறது . 2026 செப்டம்பர் மாதத்திற்குள் இந்த தொழில் பூங்காவை கட்டும் பணிகள் நிறைவு பெறும் என அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார். இந்த தொழில் பூங்கா அமைக்கப்பட்டால் ஒரு லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் 10,000 கோடி அளவிலான முதலீடுகள் ஈர்க்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அமைச்சர் டிஆர்பி ராஜா நம்பிக்கை: டெக்னிக்கல் டெக்ஸ்டைல் பிரிவில் தமிழ்நாடு முதலிடத்திற்கு வர வேண்டும் என்ற நமது கனவு நிஜமாக போகிறது என தெரிவித்திருக்கும் அமைச்சர் டிஆர்பி ராஜா ஜவுளி ஏற்றுமதி தமிழ்நாடு ஏற்கனவே முன்னிலையில் இருக்கிறது இந்த பூங்கா மூலம் அது இன்னும் பெரியதாக மாற போகிறது என தன்னுடைய எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications