ஈரான் போர் காரணமாக உலகளவில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவை சுற்றியுள்ள அண்டை நாடுகளில் எல்லாம் பெட்ரோல், டீசல் என எரிபொருட்கள் விலைகள் உயர்த்தப்பட்டுவிட்டன. இந்தியாவில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை லேசாகவும் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை பல மடங்கும் உயர்ந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை உச்சத்திலேயே இருப்பதால் விரைவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில் தான் பிரதமர் மோடி மக்கள் எரிபொருட்களை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என கேட்டு கொண்டார். இரு தினங்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் பொதுமக்கள் அதிகளவு பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என கேட்டு கொண்டார்.

இயன்ற அளவு வீட்டில் இருந்து வேலை செய்வதை நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும் என்றும், பள்ளி, கல்லூரிகள் ஆன்லைனில் செயல்பட முயற்சிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். அதாவது கொரோனா காலத்தை போல சில கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்ற வேண்டும் அது நாட்டின் பொருளாதாரத்திற்கு நல்லது என்றார். மேலும் மக்கள் தங்கம் வாங்குவதை ஓராண்டுக்கு தள்ளி போட வேண்டும் என்றார்.
இதற்கிடையே மக்களை சிக்கனமாக பெட்ரோல், டீசலை பயன்படுத்த கூறிவிட்டது அரசு மட்டும் அதனை பின்பற்றாமல் இருக்கிறதே என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், சிக்கன நடவடிக்கையாக, தன்னுடைய பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க சிறப்பு பாதுகாப்பு படைக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் வாகன எண்ணிக்கையை குறைக்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார். வாகனங்கள் குறைக்கப்பட்டாலும், கட்டாயப் பாதுகாப்பு விதிமுறைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமரின் பாதுகாப்புக்கான புளூ புக் விதிமுறைகளில் மாற்றமின்றி தேவையற்ற வாகனங்களை நீக்க அறிவுறுத்தி உள்ளார்.
தமது பாதுகாப்பு வாகனங்களில் மின்சார கார்களை கூடுதலாகப் பயன்படுத்தவும் யோசனை வழங்கியுள்ளார். இந்த மாற்றத்திற்காகப் புதிய வாகனங்களை வாங்கக் கூடாது என்றும், இருப்பில் உள்ள வாகனங்களையே பயன்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் எரிபொருள் சிக்கனத்தில் முன் உதாரணமாக மோடி மாறியுள்ளார். மோடியை அடுத்து உத்தரபிரதேசம், குஜராத், டெல்லி, ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா, பீகார், மத்திய பிரதேச மாநில முதலமைச்சர்களும் தங்களின் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்துவிட்டனர். அதே போல பாஜக அமைச்சர்களும் தங்களின் பாதுகாப்பு வாகன எண்ணிக்கைகளை குறைத்துவிட்டனர்.
இதற்கிடையே கூடிய விரைவில் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்படும் என்றும் எனர்ஜி லாக்டவுன் போன்ற சில கட்டுப்பாடுகளை அரசு கொண்டு வரும் என்றும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே தங்கம், வெள்ளி இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலையும் உயர்த்தப்பட்டால் அதனை அடுத்து பல்வேறு பொருட்களின் விலை வாசி கூடும். பால் முதல் அனைத்து பொருட்களும் விலை உயர்ந்தால் சாமானிய மக்களின் மாதாந்திர பட்ஜெட்டில் பெரிய துண்டு விழுவது நிச்சயம்.


Click it and Unblock the Notifications

