சென்னை: இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு வங்கி அமைப்புகளும், நிதி அமைப்புகளும் எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மத்திய அரசிடம் போராடி வருகின்றனர்.
இதில் முக்கியமான ஒன்று வங்கி ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, இதற்காக வங்கி ஊழியர்களின் அமைப்புகள் பல போராட்டங்களை நடத்தியிருந்த வேளையில், இதற்கு விடிவு காலம் பிறந்துள்ளது.

இந்திய வங்கிகள் சங்கம் (IBA) மற்றும் வங்கி ஊழியர் சங்கங்கள் இடையே வெள்ளிக்கிழமை ஊதிய உயர்வு குறித்து ஒரு முக்கியமான முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, வங்கி ஊழியர்களுக்கு வருடாந்திர அடிப்படையில் 17 சதவீதம் சம்பள உயர்வு வழங்கப்படும் என்ற முக்கியமான முடிவு எடுக்கப்பட்டது.
இதன் மூலம் பொதுத்துறை வங்கிகளில் பணியாற்றும் 8 லட்சம் ஊழியர்களின் சம்பளம் தடாலடியாக 17 சதவீதம் உயர உள்ளது. மேலும் வங்கிகளுக்கு ஆண்டுதோறும் கூடுதலாக ரூ.8,284 கோடி செலவாக ஏற்படும். இந்த ஊதிய உயர்வு 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும்.
அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு (AIBOA) வெளியிட்ட அறிக்கையில் அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறை நாட்கள் முடிவு ஏற்கப்பட்டதாகவும், இதை அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பின்பு நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய ஊதிய ஒப்பந்தத்தின் கீழ், அனைத்து பெண் ஊழியர்களும் மருத்துவச் சான்றிதழ் இல்லாமல் மாதத்திற்கு ஒரு நாள் விடுப்பு (sick leave) எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
ஓய்வு பெறும் போது அல்லது பணியில் இருக்கும்போது இறக்கும் ஊழியரின் சேர்க்கப்பட்ட விடுப்புக்கு (accumulated privilege leave) 255 நாட்கள் வரை பணமாக மாற்றிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசின் பணிகளில் பணியாற்றி வரும் 49.18 லட்சம் ஊழியர்கள் மற்றும் 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடையும் வகையில் முக்கிய அறிவிப்பு வெளியானது.
நாட்டின் பணவீக்க அளவீட்டை ஒப்பிட்டு மத்திய அமைச்சரவை அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தின் தற்போதைய 46 சதவீதத்தை ஒப்பிடுகையில் 4% அதிகரிப்பை ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது, இதன் மூலம் இனி 50 சதவீதம் அகவிலைப்படி உயர்வு இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த உயர்வால் மத்திய அரசுக்கு வருடம் 12,868.72 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விரு அறிவிப்புகளையும் பொதுத்தேர்தலை மையமாக வைத்து மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. அகவிலைப்படி மூலம் 1 கோடிக்கும் அதிகமான பொதுத்துறை ஊழியர்கள் குடும்பத்தைக் கவர்ந்த மோடி அரசு, வங்கித்துறை ஊழியர்களின் 17 சதவீத சம்பள உயர்வுடன் 8 லட்ச வங்கி ஊழியர்களின் குடும்பத்தைக் கவர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications