இந்தியாவின் அடுத்தக்கட்ட வேகமான வளர்ச்சிக்கு உயர் தொழில்நுட்ப துறை தான் வலுசேர்க்கும். இந்த வகையில் இந்தியா வெளிநாடுகளை நம்பியிரிக்கும் முக்கியமான துறைகளில் ஒன்றான செமிகண்டக்டர் பிரிவில் தன்னிறைவு பெற வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் இதுவரையில் சுமார் 1.6 லட்சம் கோடி மதிப்பிலான 10 திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் முதல் செமிகண்டக்டர் ஆலையான மைக்ரான் குஜராத்-ல் பிப்ரவரி மாதம் துவங்கிய நிலையில் ஒரு மாத இடைவெளியில் 2வது ஆலையை இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

குஜராத்தின் சனந்த் பகுதியில் கேன்ஸ் டெக்னாலஜி நிறுவனம் அமைத்துள்ள புதிய செமிகண்டக்டர் ஆலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார். இந்த திட்டம் உற்பத்தியை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளதுடன், இந்தியா உலகளாவிய சிப் விநியோகச் சங்கிலியில் இணைக்கும் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.
குஜராத்தின் சனந்த் பகுதி, தற்போது இந்தியாவின் முக்கிய உற்பத்தி மையமாக உருவெடுத்து வருகிறது. இங்கு தொடங்கப்பட்டுள்ள புதிய செமிகண்டக்டர் ஆலைகள், நாட்டின் தொழில்நுட்ப உற்பத்தித் திறனை மட்டும் அல்லாமல் ஏற்றுமதி திறனையைும் மேம்படுத்த உள்ளது.
சுமார் 3,300 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்ட இந்த கேன்ஸ் டெக்னாலஜி ஆலை, தினமும் சுமார் 60 லட்சம் சிப்புகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கிறது. இது OSAT (Outsourced Semiconductor Assembly and Test) ஆலையாகும். இந்த ஆலையில் சிப் பேகேஜிங் மற்றும் பரிசோதனை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த திட்டம் மத்திய அரசின் 'Make in India' திட்டத்தின் கீழ் PLI திட்ட உதவியுடன் இணைகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த சிப் அமெரிக்க நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளன. அங்கிருந்து உலகளாவிய சந்தைகளில் பயன்பாட்டுக்கு செல்லும் என பிரதமர் நரேந்திர மோடி திறப்பு விழாவில் பேசினார்.
மேலும், இந்த ஆலையில் தயாரிக்கப்படும் பொருட்கள் துவக்க நாளிலிருந்தே ஏற்றுமதிக்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ளதால், இது வணிக ரீதியாகவும் இந்த முதலீடு வெற்றியாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications