பெங்களூரு மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்த எலக்ட்ரானிக் சிட்டி வரையிலான மெட்ரோ ரயில் இணைப்பை வழங்கக்கூடிய மஞ்சள் வழித்தடத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார்.
எலக்ட்ரானிக் சிட்டிக்கு மெட்ரோ: பெங்களூரில் மையப்பகுதியையும் ஐடி நிறுவனங்கள் நிறைந்திருக்கும் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியையும் இணைக்கக்கூடிய மஞ்சள் வழிதடத்தில் பல ஆண்டுகளாக மெட்ரோ கட்டுமான பணி நடந்து வருகிறது.2017ஆம் ஆண்டு கட்டுமான பணி தொடங்கியது 2021ஆம் ஆண்டு முடிந்து பயன்பாட்டுக்கு வந்திருக்க வேண்டும்.

பணிகள் தாமதம்: கொரோனா தொற்று, ரயில் பெட்டிகள் வருவதில் தாமதம் என தொடர்ந்து மஞ்சள் வழித்தடத்தில் மெட்ரோ சேவை பயன்பாட்டுக்கு வருவதில் பல தடைகள் இருந்தன. இந்நிலையில் வெற்றிகரமாக அனைத்து சவால்களையும் கடந்து மஞ்சள் வழித்தடத்தில் மெட்ரோ சேவைகள் தொடங்கிவிட்டன. பிரதமர் நரேந்திர மோடி இன்று பெங்களூருவில் மஞ்சள் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவைகளை தொடங்கி வைத்தார்.
பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்: ராகிகுட்டா மெட்ரோ நிலையத்திலிருந்து கொடி அசைத்து வைத்து முதல் மெட்ரோ ரயில் சேவையை அவர் தொடங்கி வைத்தார். இதனை அடுத்து க்யூ ஆர் கோடு அடிப்படையில் செயல்படக்கூடிய டிக்கெட் வழங்கும் இயந்திரத்தில் டிக்கெட்டை பெற்ற நரேந்திர மோடி எலக்ட்ரானிக் சிட்டி வரை மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டார். பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்த இந்த முதல் மெட்ரோ ரயிலை பெண் லோகோ பைலட் தான் இயக்கினார் என பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் தெரிவித்திருக்கிறது.

பள்ளி குழந்தைகளுடன் பயணம்:பிரதமர் மோடியுடன் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் பள்ளி குழந்தைகள், பொதுமக்கள், கட்டுமான பணியில் ஈடுபட்டவர்கள் ஆகியோர் பயணம் செய்தனர். அப்போது பள்ளி குழந்தைகளோடு மோடி கலந்துரையாடினார். பல கட்ட தாமதத்திற்கு பிறகு பெங்களூருவில் 19 .15 கிலோமீட்டர் நீளம் கொண்ட மஞ்சள் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டிருக்கிறது.
ஐடி ஊழியர்களுக்கு நிம்மதி: நாள்தோறும் லட்சக்கணக்கான ஐடி ஊழியர்களுக்கு தங்களுடைய அலுவலகப் பயணத்தை இந்த மெட்ரோ சேவை எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும் கருதப்படுகிறது. மெட்ரோ ரயில் சேவை மட்டும் இல்லாமல் பெங்களூரில் இருந்து பெலகாவில் உள்ளிட்ட மூன்று பாதைகளுக்கான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையையும் கொடி அசைத்து மோடி தொடங்கி வைத்தார்.
போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்கலாம்:இதனை அடுத்து நம்ம மெட்ரோ சேவையின் மூன்றாவது கட்ட திட்டத்திற்கான அடிக்கல்லையும் அவர் நாட்டினார். பெங்களூருவில் நாளை முதல் மஞ்சள் வழித்தடத்தில் ரயில் சேவை முழுமையாக இயக்கப்பட உள்ளது. நாள்தோறும் 8 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சில்க் போர்டு முதல் எலக்ட்ரானிக் சிட்டி ,பொம்மசந்திரா இடையிலான பயணம் இதன் மூலம் எளிதாக்கப்பட்டு இருக்கிறது.
கட்டணம் : ஒவ்வொரு 25 நிமிட இடைவெளியிலும் ரயில் இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. காலை 5 மணியிலிருந்து இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்றும் 10 ரூபாயிலிருந்து 90 ரூபாய் வரை மெட்ரோ ரயில் கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றன என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
பயண நேரம்:ஆர்வி சாலையில் இருந்து ஜெயதேவா ரயில் நிலையத்திற்கு செல்பவர்களுக்கு 10 ரூபாயும் , ஒயிட் ஃபீல்டில் இருந்து பர்பில் லைன் வழியே மஞ்சள் வழித்தடத்தில் இணைந்து பொம்ம சந்திரா வரை செல்பவர்களுக்கு 90 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். தற்போது சாலை வழியாக இந்த வழித்தடத்தில் பயணம் செய்பவர்களுக்கு ஒன்றரை மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரம் வரை ஆகலாம் அது மெட்ரோ சேவை மூலம் 45 நிமிடங்களாக குறையும்.


Click it and Unblock the Notifications