இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு டிரம்ப் அரசு 50 சதவீத இறக்குமதி வரி விதித்திருக்கிறார் . கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதியிலிருந்து இந்த 50% வரிவிதிப்பு என்பது நடைமுறையில் இருக்கிறது.
முதலில் இந்திய பொருட்களுக்கு டிரம்ப் 25 சதவீத வரியை விதித்தார். பின்னர் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதற்கு தண்டனையாக கூடுதலாக 25% என மொத்தமாக 50% இறக்குமதி வரியை விதித்திருக்கிறார். டிரம்பின் இந்த நடவடிக்கையால் இந்தியாவில் இருக்கும் ஏற்றுமதி துறை சார்ந்த நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்த ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் , தோல் சார்ந்த பொருட்கள் உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன .

திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் எல்லாம் ஜவுளி உற்பத்தியாளர்கள் , லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்படைந்தனர். இதனால் இந்தியாவில் ஏற்றுமதி இறக்குமதிக்கான இடைவெளி அதிகரித்து வர்த்தக பற்றாக்குறை ஏற்பட்டது. ஆனால் இரண்டே மாதங்களில் மத்திய அரசு இந்த வரி விதிப்பால் ஏற்பட்ட பிரச்சனையை தவிடு பொடியாக்கி இருப்பது தரவுகளின் மூலம் தெரிய வந்திருக்கிறது.
ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் மாற்று சந்தைகளை அணுகும் வகையில் அரசு பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதனால் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை பாதியாக குறைந்துவிட்டது. இந்தியாவில் அக்டோபர் மாதத்தில் வர்த்தக பற்றாக்குறை 41.68 பில்லியன் டாலர்களாக இருந்தது. இதுவே நவம்பர் மாதத்தில் 24.53 பில்லியன் டாலர்களாக கிட்டத்தட்ட பாதி அளவுக்கு குறைந்துவிட்டது .
அதாவது செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அமெரிக்காவின் வரி விதிப்பால் ஏற்பட்ட வர்த்தக பற்றாக்குறை நவம்பர் மாதத்தில் சரி செய்யப்பட்டு விட்டது என மத்திய வர்த்தகத்துறை செயலாளர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்திருக்கிறார். நவம்பர் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 19.37% அதிகரித்தது என்றும் மொத்தம் 38.13 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதி நடைபெற்றதாகவும் கூறியிருக்கிறார். இறக்குமதியை பொருத்தவரை 1.88 சதவீதம் குறைந்து இருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.குறிப்பாக சேவை சார்ந்த ஏற்றுமதி அதிகரித்து இருக்கிறது என கூறியிருக்கிறார்.
அமெரிக்காவில் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரிவிதிப்பு இருந்தாலும் இந்திய பொருட்களுக்கான தேவை அமெரிக்காவில் தொடர்ந்து நீடித்து வருகிறது இது இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை தொடர்ந்து வலுவாக வைத்திருக்கிறது என தரவுகள் கூறுகின்றன. ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் இந்தியாவின் வர்த்தக மெர்ச்சண்டைஸ் ஏற்றுமதி 292.7 பில்லியன் டாலர்களை எட்டி இருக்கிறது . அதே வேளையில் இறக்குமதி 515.21 பில்லியன் டாலர்கள் என இருக்கிறது.
அமெரிக்காவுக்கான ஏற்றுமதி கடந்த ஆண்டு 53 பில்லியன் டாலராக இருந்து இந்த ஆண்டு 59 பில்லியன் டாலர்களாக அதிகரித்திருக்கிறது.மோடி அரசின் வரி குறைப்பு நடவடிக்கை, ஏற்றுமதி ஊக்கத்தொகை போன்றவை அமெரிக்காவின் வெளிப்புற அழுத்தத்தில் இருந்து இந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க உதவியுள்ளது.


Click it and Unblock the Notifications