நம் பூமியில் ஏராளமான விலங்குகள் மற்றும் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. ஆனால் காடுகள் அழிக்கப்படுதல், காலநிலை மாற்றங்கள், போதிய மழை இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் பல விலங்கினங்கள் அழிந்து வருகின்றன. மேலும் அவை வாழ்வதற்கு இடமில்லாமல் உணவு கிடைக்காமல் கஷ்டப்படுகின்றன. இந்நிலையில் அழியும் விலங்குகளைக் காப்பாற்றும் நோக்கில் குஜராத்தில் மிகப்பெரிய வனவிலங்கு மறுவாழ்வு மையம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த வனவிலங்கு மறுவாழ்வு மையத்தின் பெயர் "வந்தாரா". இதை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார். வந்தாரா சுமார் 3,500 ஏக்கர் பரப்பளவில் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட அழிந்து வரும் விலங்குகளுக்கு அடைக்கலமாக செயல்படவுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தனது வருகையின் போது வந்தாரா மையத்தின் முக்கிய வசதிகள் குறித்தும் பார்வையிட்டார். அங்குள்ள விலங்குகளுடன் நேரம் செலவிட்டார். வெள்ளை சிங்கக்குட்டிகள், சிறுத்தை, ஆசிய சிங்கக் குட்டிகள் போன்றவற்றுக்கு உணவு வழங்கினார். அதோடு கராகல் என்று சொல்லப்படும் காட்டுப்பூனை ஒரு காலத்தில் இந்தியாவில் பரவலாக காணப்பட்டது. ஆனால் தற்போது இந்த உயிரினம் அழிவின் விளிம்பில் உள்ளது. இதன் எண்ணிக்கையை மீண்டும் அதிகரிக்கும் நோக்கில் வந்தாரா மையத்தில் ஒரு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வந்தாரா வனவிலங்கு மறுவாழ்வு மையத்தில் வனவிலங்கு மருத்துவமனையும் உள்ளது. இதில் எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன்கள், பிறந்த விலங்குகளுக்கான ஐசியு மற்றும் வனவிலங்குகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவுகளும் உள்ளன. இந்த மருத்துவமனையில் வனவிலங்குகளுக்கான மயக்க மருந்து, இருதயவியல், சிறுநீரகவியல், எண்டோஸ்கோபி, பல் மருத்துவம் உள்ளிட்ட பல சிறப்பு பிரிவுகளும் உள்ளன. இந்த மையத்தை திறந்து வைக்கும் போது பிரதமர் நரேந்திர மோடி சிங்கக்குட்டிக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் செய்வதையும் கவனித்தார்.
வந்தாரா மையத்தை திறந்து வைக்கும் போது நரேந்திர மோடி சாதாரணமாக பார்க்க முடியாத பல அறிய விலங்குகளையும் பார்வையிட்டார். சர்க்கஸில் இருந்து காப்பாற்றப்பட்ட புலிகள், வெள்ளை நிற சிங்கம், சிறுத்தை போன்ற விலங்குகளை நேரில் பார்த்தார். ஒட்டகச்சிவிங்கிக்கு உணவளித்தார்.
இந்த மையத்தில் இரண்டு தலை பாம்பு, இரண்டு தலை ஆமை, ராட்சத நீர் நாய்கள், மான்கள் போன்ற மிக அரிதான உயிரினங்களையும் பிரதமர் மோடி பார்வையிட்டார். இங்கு யானைகளுக்கு சிகிச்சை அளிக்கும் நோக்கில் உலகின் மிகப்பெரிய யானை மருத்துவமனையும் உள்ளது. உலகத்தின் பல பகுதிகளில் இருந்து கால்நடை மருத்துவர்கள் மற்றும் விலங்குகளை பராமரிப்பவர்கள் இந்த மையத்தில் வேலை செய்கின்றனர். இந்த மையம் உலகின் மிகப்பெரிய விலங்கு மீட்பு மற்றும் மறுவாழ்வு மையமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications