ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது வெளிநாட்டுப் பயணத்தின் ஒரு பகுதியாக ஜூலை 8, திங்கட்கிழமை முதல் இரண்டு நாள் அரசு முறை பயணமாக மாஸ்கோவிற்கு செல்ல உள்ளார்.
பிப்ரவரி 2022 இல் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு மோடியின் முதல் ரஷ்யா பயணம் இது என்பதால் இந்திய - ரஷ்யா மட்டும் அல்லாமல் உலக நாடுகளுக்கும் இது மிகவும் முக்கியமானதாக உள்ளது.

நரேந்திர மோடி இதற்கு முன்னதாக 2019 இல் விளாடிவோஸ்டாக்கில் (Vladivostok) நடந்த பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்ட போது ரஷ்யா சென்றார். அதன் பின்பு ரஷ்யா உக்ரைன் போர் கச்சா எண்ணெய் முதல் உணவுப் பொருட்கள் வரையில் பெரும் பாதிப்பை உருவாக்கியது, இதேவேளையில் இந்தியா - ரஷ்யா மத்தியிலான வர்த்தகம், நிதி பரிமாற்றம் பல மடங்கு உயர்ந்தது.

பிரதமர் நரேந்திர மோடியின் ரஷ்ய பயணத்திற்கு முன்னதாக, சென்னை-விளாடிவோஸ்டோக் கடல்வழிப் பாதையைச் செயல்படுத்துவதற்கும், வளர்க்கவும் இந்திய மற்றும் ரஷ்ய அரசாங்கங்களுக்கு இடையேயான முக்கியமான விவாதங்கள் கடந்த வாரம் வேகமெடுத்ததாக மூத்த அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லோக்சபா தேர்தலுக்குப் பின்பு ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை வேகம் எடுத்துள்ளது, மேலும் இரு அரசாங்கங்களும் சென்னை-விளாடிவோஸ்டாக் பாதையின் வளர்ச்சியை விரைவாகக் கண்காணிக்க முயல்கின்றன.

இதன் மூலம் இந்தியா கிழக்கு கடல் வழி போக்குவரத்தை மேம்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்கு ஹப் ஆக சென்னை இருக்க போகிறது என்பது தான் மிக முக்கியமான விஷயம்.
மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால், கிழக்குப் பொருளாதார மாநாட்டில் (Eastern Economic Forum) பங்கேற்பதற்காகச் செப்டம்பர் மாதம் ரஷ்யா செல்ல உள்ளதாகவும், அதற்கு முன்பு ரஷ்யாவில் இருந்து தொழிலதிபர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் குழு ஆகஸ்ட் மாதம் மும்பைக்கு வர இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் உடனான, நரேந்திர மோடியின் பேச்சுவார்த்தையில் சென்னை-விளாடிவோஸ்டாக் கடல்வழிப் பாதை முக்கிய பங்காற்றும் என கூறப்பட்டாலும், இதை முழுமையாக உறுதி செய்ய முடியவில்லை.


Click it and Unblock the Notifications