தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கில் மற்றும் தொழில் செய்ய விரும்புபவர்கள், கடின உடல் உழைப்பை பணியாக கொண்டவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என பல தரப்பு மககளை தொழில் முனைவேராக ஆக்கி அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி 2015 ஏப்ரல் 8ம் தேதியன்று பிரதான் மந்திரி முத்ரா திட்டத்தை தொடங்கினார். மத்திய அரசின் முத்ரா திட்டத்தின்கீழ், ரூ.10 லட்சம் வரை பிணை இல்லாத கடனை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்குகின்றன.
முத்ரா கடன் நான்கு வகைகளில் வழங்கப்படுகிறது. சிஷு (ரூ.50,000 வரை கடன்கள்), கிஷோர் (ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை) மற்றும் தருண் (ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான கடன்கள்) மற்றும் தருண் பிளஸ் பிரிவின்கீழ் ரூ20 லட்சம் வரையிலான கடன்கள் வழங்கப்படும். தருண் பிரிவின் கீழ் முந்தைய கடன்களை பெற்று வெற்றிகரமாக திருப்பி செலுத்திய தொழில்முனைவோருக்கு மட்டுமே தருண் பிளஸ் பிரிவின்கீழ் கடன் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. முத்ரா திட்டம் மக்களிடம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

முத்ரா திட்டம் இன்றோடு 10 ஆண்டுளை நிறைவு செய்கிறது. இந்த திட்டத்தின்கீழ், 10 ஆண்டுகளில் மொத்தம் ரூ.32.61 லட்சம் கோடி மதிப்பிலான 52 கோடிக்கும் அதிகமான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. முத்ரா திட்டம் 10 ஆண்டுகள் நிறைவு செய்வதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் பக்கத்தில், இன்று முத்ராவின் 10 ஆண்டுகளை குறிக்கும் வேளையில், இந்த திட்டத்தின் மூலம் தங்கள் வாழ்க்கையை மாற்றியமைத்த அனைவருக்கும் நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த தசாப்தத்தில், முத்ரா யோஜனா பல கனவுகளை நனவாக்கியுள்ளது. நிதி உதவியுடன் முன்னர் கவனிக்கப்படாமல் இருந்த மக்களை பிரகாசிக்க அதிகாரம் அளித்தல், இந்திய மக்களுக்கு எதுவும் சாத்தியமற்றது அல்ல என்பதை இது விளக்குகிறது. முத்ரா திட்டத்தின் பயனாளிகளில் பாதி பேர் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி சமூகங்களை சேர்ந்தவர்கள் என்பதும், 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் பெண்கள் என்பதும் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஒவ்வொரு முத்ரா கடனும் கண்ணியம், சுயமரியாதை மற்றும் வாய்ப்பை கொண்டுள்ளது.
வரவிருக்கும் காலங்களில், ஒவ்வொரு ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கும் கடன் கிடைக்கும் வகையில் ஒரு வலுவான சுற்றுச்சூழல் அமைப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்தும், இதனால் அவர்களுக்கு நம்பிக்கையும் வளர்ச்சிக்கான வாய்ப்பும் கிடைக்கும் என்று தெரிவித்து இருந்தார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எக்ஸில், 2015ம் ஆண்டு பிரதமர் மோடி அவர்களால் பிரதமரின் முத்ரா யோஜனா தொடங்கப்பட்டதிலிருந்து கிட்டத்தட்ட 70 சதவீத முத்ரா கடன்கள பெண் தொழில்முனைவோரால் பெறப்பட்டுள்ளன. முத்ரா உண்மையிலேயே நாரி (பெண்கள்) சக்தியை மேம்படுத்துகிறது என்று தெரிவித்து இருந்தார்.


Click it and Unblock the Notifications