பிரதமர் நரேந்திர மோடி இன்று டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும் கோடீஸ்வரருமான எலான் மஸ்க்கை சந்தித்து பேசவுள்ளார். இந்த சந்திப்பின்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகரான மைக்கேல் வால்ட்ஸ் மற்றும் இந்திய வம்சாவளி தொழிலதிபரான விவேக் ராமசாமி ஆகியோரும் சந்தித்துப் பேசவுள்ளனர். முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை அன்று வாஷிங்டன், டிசியில் அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்டுடன் ஒரு சந்திப்பை நடத்தினார். பிரதமர் மோடியும், துளசி கப்பார்டும் இந்தியா-அமெரிக்க நட்பின் பல்வேறு அம்சங்களைப் குறித்து பேசியதாகக் கூறப்படுகிறது.
துளசி கப்பார்டுடன் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தனது X பதிவில், இந்தியா-அமெரிக்க நட்பின் பல்வேறு அம்சங்கள் குறித்து பேசியதாகவும், துளசி இந்தியாவிற்கு ஒரு வலுவான ஆதரவை தொடர்ந்து வழங்கி வருவதாகவும் பதிவிட்டிருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில் 2 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்காவிற்கான இந்திய தூதர் வினய் மோகன் குவாத்ரா மற்றும் பிற அதிகாரிகள் அவரை விமான நிலையத்தில் வரவேற்றனர். டொனால்ட் ட்ரம்ப் 2-வது முறையாக பதவியேற்ற பிறகு பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு செல்லும் முதல் பயணம் இதுவாகும்.
அமெரிக்காவில் தரையிறங்கியதும், பிரதமர் மோடி பிளேர் ஹவுஸுக்கு சென்று, அங்கு கூடியிருந்த இந்திய புலம்பெயர்ந்தோரை வரவேற்றார். பிளேர் ஹவுஸில் அவரை வரவேற்ற மக்கள் "பாரத் மாதா கி ஜெய்" மற்றும் "மோடி மோடி" என்று கோஷமிடத் தொடங்கினர். அதன் பின்னர் பிரதமர் மோடி தன்னை வரவேற்றதற்கு நன்றி தெரிவித்தார்.
குளிர்காலத்தில் கிடைத்த அன்பான வரவேற்பு: "குளிர் காலநிலை இருந்தபோதிலும், வாஷிங்டன் டிசியில் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோர் என்னை அன்போடு வரவேற்றனர். அவர்களுக்கு எனது நன்றி" என்று பிரதமர் மோடி தனது X பதிவில் பதிவிட்டிருந்தார்.
அமெரிக்கா வந்தடைந்த பிரதமர் மோடி டிரம்பைச் சந்தித்து இந்தியா-அமெரிக்கா இடையே வலுவான கூட்டாண்மையை உருவாக்க ஆவலுடன் இருப்பதாகவும், மக்களின் நலனுக்காகவும் சிறந்த எதிர்காலத்திற்காகவும் தொடர்ந்து இரு நாடுகளும் நெருக்கமாக பணியாற்றும் என்றும், தனது வருகை இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டணியை ஆழப்படுத்தும் வாய்ப்பாக பார்ப்பதாகவும் கூறியிருந்தார்.
நவம்பர் 2024 முதல், பிரதமர் மோடியும் டிரம்பும் இரண்டு முறை தொலைபேசியில் பேசியதாகவும் கூறப்படுகிறது. பொதுவாக இரு நாட்டுத் தலைவர்கள் சந்திக்கும்போது ஏதேனும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவும்.
2005 ஆம் ஆண்டிலும் இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து ஒரு வலுவான கூட்டான்மையை தொடங்கின. பிப்ரவரி 2020-ஆம் ஆண்டு இந்தியாவிற்கு டொனால்ட் ட்ரம்ப் பயணம் செய்தார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் விரிவடைய தொடங்கியது. இந்நிலையில் இந்த முறை பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் சில முக்கிய முடிவுகளுக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications