சென்னை: பணப்பரிவர்த்தனை செய்வதற்கு அனைவருக்குமே வங்கி கணக்கு முக்கியம். ஆனால் சிலர் தேவைக்கு அதிகமான, வங்கிக் கணக்கை தொடங்கிவிட்டு பராமரிக்காமல் அப்படியே விட்டுவிடுகின்றனர். அதன்படி வங்கிக் கணக்கை சில வருடங்களாக பயன்படுத்தாமல் இருந்த வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கை டீ-ஆக்டிவேட் செய்ய உள்ளதாக PNB வங்கி அறிவித்துள்ளது.
நாட்டிலுள்ள பலரும் குறைந்தது ஒரு வங்கி கணக்காவது வைத்திருப்போம். அதிலும் சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளைத் தொடங்கி விட்டு, பணப்பரிவர்த்தனை செய்யாமல் விட்டுவிடுவர். இதுபோன்ற 2 முதல் 3 ஆண்டுகள் வரை பயன்படுத்தாத வங்கி கணக்குகளை முடக்க உள்ளதாக பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) அறிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு, மே 31ஆம் தேதிக்குள் கேஒய்சி சரிபார்ப்பை முடிக்காவிட்டால், கடந்த மூன்று ஆண்டுகளில் செயல்பாடு இல்லாமல் இருந்த வங்கிக் கணக்குகளை டீ-ஆக்டிவேட் செய்து விடுவோம் என்று பஞ்சாப் நேஷனல் பேங்க் கூறியுள்ளது. இந்த தேதிக்குப் பிறகு எந்த எச்சரிக்கையும் வழங்கப்பட மாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது..
எந்தெந்த PNB வங்கிக் கணக்குகள் டீ-ஆக்டிவேட் செய்யப்பட உள்ளது?: ஏப்ரல் 30ஆம் தேதி நிலவரப்படி, 3 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல், ஜீரோ பேலன்ஸ் வைத்திருக்கும் நபர்களுடைய வங்கி கணக்குகள் டீ-ஆக்டிவேட் செய்யப்பட உள்ளது.
வங்கி கணக்குகள் எப்போது டீ-ஆக்டிவேட் செய்யப்படும்?: செயல்படாத வங்கி கணக்குகள் ஜூன் 1ஆம் தேதி அன்று டீ-ஆக்டிவேட் செய்யப்பட உள்ளது.
டீ-ஆக்டிவேட் செய்யப்படுவதில் யார் யாருக்கு விலக்கு அளிக்கப்படுகிறது?:
டிமேட் அக்கவுண்டுகள் அல்லது செயலில் உள்ள அக்கவுண்டுகள் முடக்கப்படமாட்டாது. அதேபோல் 25 வயதிற்கு உட்பட்ட மாணவர்களின் வங்கி கணக்குகளும் டீ-ஆக்டிவேட் செய்யப்பட மாட்டாது. மைனர் அக்கவுண்ட்கள், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா, பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா, அடல் பென்ஷன் யோஜனா, சுகன்யா சம்ரிதி யோஜனா போன்ற திட்டங்களுக்காக திறக்கப்பட்ட கணக்குகளும் முடக்கப்பட்ட மாட்டாது.
உங்கள் PNB வங்கி கணக்கு டீ-ஆக்டிவேட் செய்யப்பட்டால்.. நீங்கள் என்ன செய்ய வேண்டும்?: உங்கள் PNB வங்கி கணக்கு டீ-ஆக்டிவேட் செய்யப்பட்டால், அருகில் உள்ள வங்கி கிளைக்கு சென்று தேவையான KYC ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம், அதை மீண்டும் நீங்கள் செயல்பட வைக்கலாம். அல்லது கணக்கு டீ-ஆக்டிவேட் செய்யப்படுவதைத் தடுக்க மே 31ஆம் தேதிக்கு முன் KYC ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
KYC சரிபார்ப்புக்கு தேவைப்படும் ஆவணங்கள்: பான் கார்டு, ஆதார் கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ் போன்ற ஆவணங்கள் தேவைப்படலாம்.
பயன்பாட்டில் இல்லாத வங்கி கணக்குகளைக் குறிவைத்து மோசடி கும்பல் பல திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதாக ஆர்பிஐ தொடர்ந்து எச்சரித்த வண்ணம் உள்ளது. எனவே, பயன்பாடற்ற கணக்குகளை வைத்திருப்பது, வங்கிக்கு மட்டுமல்லாமல், உங்களுக்கும் பிரச்சனை தான். உங்களுக்கு ஏதேனும் வங்கி கணக்குத் தேவையில்லை என்றால். அதை வங்கிகளுக்கு சென்று டீ-ஆக்டிவேட் செய்து கொள்வது நல்லது.
கணக்குகளின் அறிக்கையை அடிக்கடி சரி பார்ப்பது அவசியம். உங்களுக்குத் தெரியாத ஏதேனும், பணப்பரிவர்த்தனை நடந்திருக்கிறதா.. என்பதை தெரிந்து கொள்ள இது உங்களுக்கு உதவியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications