பெல்ஜியம்: இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு தொழிலதிபர்களும் வங்கிகளில் கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்து விட்டு நாட்டை விட்டு தப்பி ஓடியுள்ளனர். விஜய் மல்லையா , நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகிய மூன்று பேரும் பொதுத்துறை வங்கிகளை ஏமாற்றி தங்கள் நிறுவனங்களின் மூலமாக 22,585.83 கோடி ரூபாய் இழப்பினை ஏற்படுத்தியுள்ளனர்.
இவர்களில் கடந்த 2018 ஆம் ஆண்டு மிகப் பரபரப்பாக பேசப்பட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி தான் மெகுல் சோக்சி. இவரை இதுவரை நமது புலனாய்வு அமைப்புகளால் கைது செய்ய முடியவில்லை. நாடு விட்டு நாடு தப்பி ஓடி கொண்டிருக்கும் மெகுல் சோக்சி தற்போது பெல்ஜியத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரிகளான மெகுல் சோக்சி மற்றும் அவரது உறவினர் நீரவ் மோடி ஆகியோர் கடந்த 2018 ஆம் ஆண்டு பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,500 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி சென்றனர். லண்டனுக்கு தப்பிச்சென்ற நீரவ் மோடி 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அங்கு கைது செய்யப்பட்டார். ஆனால் மெகுல் சோக்சி அங்கிருந்து ஆன்ட்டிக்குவா தீவுக்கு தப்பினார். அண்மையில் அவர் ஆன்டிக்வா தீவில் இருந்தும் தப்பி விட்டதாக தகவல் வெளியானது. பின்னர் அவர் டொமினிக்கில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சூழலில் மெகுல் சோக்சி பெல்ஜியம் நாட்டில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உடனடியாக பெல்ஜியத்தில் அவரை பிடித்து அடைத்து வைக்கவில்லையெனில் அவர் அங்கிருந்து பிரான்ஸ் நாட்டுக்கு தப்பிச் செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தேடும் குற்றவாளியாக மெகுல் சோக்சியை அறிவித்துள்ளனர்.
முன்னதாக மெகுல் சோக்சி சார்பில் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில், அவருடைய பாஸ்போர்ட் தடை செய்யப்பட்டதற்கான ஆவணங்களை கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மும்பை நீதிமன்றம் அந்த ஆவணங்களை வழங்க கூடாது என அறிவித்து விட்டது. தற்போதைய சூழலில் மெகுல் சோக்சியால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற பிரிவின் கீழ் அவரது பாஸ்போர்ட் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மெகுல் சோக்சியை நாட்டை விட்டு தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் கோரியுள்ளது. ஆனால் அவ்வாறு அறிவிக்க கூடாது என மெகுல் சோக்சி சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
Written by: Devika


Click it and Unblock the Notifications