டெல்லி: மத்திய நிதி பட்ஜெட்டில் பீகார் மாநிலத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான அறிவிப்புகள் அதிகமாக இருக்கின்றன. சமூக வலைத்தளவாசிகள் பலரும் இதனை அடிப்படையாகக் கொண்டு மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைப்பதற்கு உதவியாக இருந்தது பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் கட்சி தான். எனவே மத்திய அரசு பீகார் மாநிலத்துக்கு முக்கியத்துவம் அளித்து பட்ஜெட்டில் திட்டங்களை அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி பீகார் மாநிலத்தில் நடப்பாண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பீகாரில் மக்கானா வாரியம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். மக்கானா விதைகள் உற்பத்தி, செயலாக்கம், மதிப்பு கூட்டல் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றை இந்த வாரியம் மேற்கொள்ளும் என கூறினார். அதே போல பீகார் மாநிலத்தில் தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனம் அமைக்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பீகார் மாநிலம் பாட்னாவில் இருக்கும் ஐஐடி விரிவாக்கம் செய்யப்படும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் அறிவித்தார். பீகாரின் பாட்னா விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். பீகாரின் மிதிலாஞ்சல் பகுதியில் மேற்கு கோசி கால்வாய் திட்டம் செயல்படுத்த நிதி உதவி வழங்கப்படும் என்றார்.
இதனை அனிமல் படத்தில் ரன்பீர்கபூர் அப்பா என்ற வார்த்தையை 196 முறை கூறி இருக்கிறார் என்றால் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் பீகார் என்ற வார்த்தையை 537 முறை கூறியிருக்கிறார் என ஒரு நபர் மீம் வெளியிட்டுள்ளார். பட்ஜெட்டில் பீ என்றால் பீகார் என அர்த்தம் என ஒரு பயனர் மீம் வெளியிட்டுள்ளார்.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பீகார் மாநிலத்தை மற்றும் காப்பாற்றி விட்டு மற்ற மாநிலங்களை நீச்சல் குளத்தில் மூழ்கடிக்க செய்துவிட்டார் என்பதை போல குறிப்பிடும் ஒரு மீம் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி உள்ளது. அதேபோல சிவாஜி படத்தில் ரஜினிகாந்த் நடந்து வரும் இடமெல்லாம் நவீனமாக மாறிவரும் அந்த வீடியோவை வெளியிட்டு 2025 மத்திய பட்ஜெட்டுக்கு பிறகு பீகார் என வீடியோ மீம் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிந்து மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தது. இதனை அடுத்து ஜூலை மாதம் நிர்மலா சீதாராமன் மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போதும் பீகார் மாநிலத்தை கவனத்தில் கொண்டு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. குறிப்பாக பீகார் மாநிலத்தில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்காக சுமார் 60,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மத்தியில் பாஜக ஆட்சி அமைப்பதற்கு பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் கட்சியும், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் கட்சியும் பெருமளவில் ஆதரவு தந்தன.

story written by: Devika


Click it and Unblock the Notifications