இந்தியாவில் எங்கு இருந்தாலும் பொங்கல் பண்டிக்கைக்கு மட்டும் எப்படியாவது ஊருக்கு சென்றுவிட வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கும். மற்ற பண்டிகைகளை காட்டிலும் தமிழ்நாடு மக்களுக்கு பொங்கல் பண்டிகை என்பது மனதுக்கு நெருக்கமானது. இந்த வகையில் இந்த பொங்கலுக்கு சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு இருந்தால், தமிழ்நாடு அரசின் சிறப்பு பேருந்தில் எப்படி டிக்கெட் புக் செய்வது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
தைப்பொங்கல் முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பல ஏற்பாடுகளை செய்துள்ளது. ஜனவரி 9 முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதால் பல லட்சம் மக்கள் ஏற்கனவே கூட்ட நெரிசலை தவிர்க்க லீவ் போட்டுக்கொண்டோ அல்லது வொர்க் ப்ரம் ஹோம் வாங்கிக்கொண்டு சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இதுவரை 3 நாட்களில் 3.58 லட்சம் பேர் இந்த சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர்.

சிறப்பு பேருந்துகளின் எண்ணிக்கை
பொங்கல் காலத்தில் வழக்கமான அரசு பேருந்துகளுடன் கூடுதலாக 21,535 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் சென்னையில் இருந்து மட்டும் 10,245 பேருந்துகளும், மாநிலத்தின் மற்ற முக்கிய இடங்களில் இருந்து 11,290 பேருந்துகளும் இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் இந்த பொங்கல் பண்டிக்கைகாக தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 34,087 பேருந்துகள் பயணிகளின் தேவைக்கு ஏற்ப இயக்கப்பட உள்ளகு. தேவை அதிகரிக்கும் போது மேலும் கூடுதல் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் முன்பதிவு செய்யும் வசதிகள்
தமிழ்நாட்டு மக்களின் பொங்கல் பயணத்தை எளிதாக்கும் வகையில் முன்பதிவு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. tnstc official app, www.tnstc.in இணையதளம் மற்றும் வாட்ஸ்ஆப் எண் 9444018898 மூலம் எளிதாக முன்பதிவு செய்யலாம். இதுவரை 2.38 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாகவும் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
முன்பதிவு மையங்கள்
சென்னையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 10 முன்பதிவு மையங்களும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஒரு முன்பதிவு மையமும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முன்பதிவு மையங்கள் ஜனவரி 12 முதல் 14 வரை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும்.
பயணிகளுக்கான கூடுதல் வசதி
பேருந்து முன்பதிவு செய்த பயணிகள் பேருந்து எங்கு நிறுத்தப்பட்டு உள்ளது, எந்த பிளாட்பார்ம்-ல் நிறுத்தப்பட்டு உள்ளது போன்ற முக்கியமான விபரங்களை ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே "Know Your Bus" வசதி மூலம் தெரிந்துகொள்ளலாம்.
இது பேருந்து முன்பதிவு செய்த பயணிகளுக்கு நேரத்தை மிச்சப்படுத்துவதுடன், குழப்பத்தையும், நெரிசலையும் தவிர்க்கும் வகையில் அமையும்.


Click it and Unblock the Notifications