பொங்கல் பண்டிகை நாளை தொடங்க உள்ளது. தமிழர்களின் பாரம்பரியமான இந்த பொங்கல் பண்டிகை கோலாகலமாக தமிழ்நாட்டில் கொண்டாடப்பட உள்ளது. குறிப்பாக பொங்கல் பண்டிகைக்கு பொருட்களுடன் கரும்பு முக்கியமானதாக உள்ளது. எனவே, இந்த ஆண்டில் கரும்பு விற்பனையும் சூடுபிடித்தது. தமிழ்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளுக்கும் கரும்பு புக்கிங் அதிகம் செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், ஷார்ஜா, அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கு கரும்பு புக்கிங் அதிகளவு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இங்கிருந்து குறிப்பாக கோவை-ஷார்ஜா இடையே வாரத்தில் 5 நாட்கள் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கோவை விமான நிலையத்தில் இருந்து வழக்கமாக ஒவ்வொரு முறையும் 3 டன்கள் வரை சரக்குகள் கையாளப்படுவது வழக்கம். மேலும் காய்கறிகள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் உள்ளிட்ட பொருட்கள் முன்பதிவு செய்யப்படும்.

இந்த நிலையில்தான், இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஷார்ஜா செல்லும் விமானத்தில் கரும்புகளை கொண்டு செல்வதற்கான புக்கிங் பணிகள், கடந்த சில நாட்களாக முழுவீச்சில் நடைபெற்றன. எனவே, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 10, 11-ந்தேதி ஆகிய 2 நாட்களில் மட்டும் கோவை விமான நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து 2 டன் கரும்புகள் புக்கிங் செய்யப்பட்டு, ஷார்ஜாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக கோவை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், தொடர் விடுமுறை காரணமாக, கோவை விமான நிலையத்தில் தினமும் 10 ஆயிரம் பயணிகள் வந்து செல்லும் நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் கூட்டமும் அதிகரித்து உள்ளது.
அதன்படி, ஜனவரி 9-ந்தேதி மட்டும் உள்நாட்டு பிரிவில் 9893 பேரும், வெளிநாட்டுப்பிரிவில் இருந்து 1279 பேரும் என மொத்தம் 11,172 பேர் பயணித்து உள்ளனர். அத்துடன் 33 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications