தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை அடுத்த வாரம் தொடங்குகிறது. பொங்கல் பண்டிகை என்றாலே தமிழர்களுக்கு குஷியை ஏற்படுத்தும் பண்டிகையாக அமைகிறது. இந்த வருடம் 2025-ஆம் ஆண்டிற்கான பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. ஒவ்வொரு வருடமும் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசுதொகுப்பு வழங்குதும் உண்டு. அந்த வகையில், இந்த ஆண்டிற்கான பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது.
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 கொடுக்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு அது வழங்கப்படவில்லை. மாறாக மகளிர் உரிமைத் தொகையான ரூ.1000 இன்று முதல் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உரிமைத்தொகை முன்கூட்டியே வரவுவைக்கப்பட்டு வருகிறது.

மாதம்தோறும் 15 ஆம் தேதிக்குள் மகளிர் உரிமைத் தொகை வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வரும் நிலையில் இந்த மாதம் உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என மக்கள் எதிர்ப்பார்க்க தொடங்கிவிட்டனர். இந்நிலையில் இந்த மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை ஜனவரி 10 ஆம் தேதி வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனவே, பெண்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. பொங்கல் பரிசுடன் ரொக்கம் ரூ.1000 வழங்காமல் அரசு முன்கூட்டியே மகளிர் உரிமை தொகையை செலுத்துகிறது.
தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு ஆண்டு தோறும் இந்த தொகை வழங்கப்பட்டு வந்தது. திமுக அரசு பொறுப்பேற்ற நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் சென்ற ஆண்டில் வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு பொங்கல் பரிசு அறிவித்த தமிழ்நாடு அரசு ஆயிரம் ரூபாய் ரொக்கம் அறிவிக்கவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது.
பொங்கல் பரிசு தொகுப்பு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த பொங்கல் பரிசை சுமார் 2.20 கோடி ரேஷன் அட்டைதாரர்களும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களிலும் உள்ள மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கான டோக்கன் விநியோககிக்கும் பணிகள் கடந்த ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கியது.
தொடர்ந்து ஜனவரி 9 ஆம் தேதி முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு விநியோகம் தொடங்கியுள்ளது. இதனை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.ஒரு கிலோ பச்சரிசி, முழுக் கரும்பு, சர்க்கரை இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படுகிறது. அத்துடன் இலவச வேட்டி சேலையும் கொடுக்கப்பட உள்ளது.
இது குறித்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட செய்தியில், தமிழ்நாடு அண்மையில் மிகப்பெரிய பேரிடர்களை சந்தித்துவிட்டது. இதற்காக மத்திய அரசு அந்த பேரிடர்களை சரிசெய்ய எந்த நிதியும் கொடுக்கவில்லை. இதனால் ஆயிரம் ரூபாய் ரொக்கம் பணம் பொங்கல் பரிசு தொகுப்பில் இடம்பெறவில்லை என கூறினார்.
அதேநேரத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் மாதம் ஆயிரம் ரூபாய் தொகை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் பெற்றுக் கொண்டிருக்கின்றனர். ஆண்டு ஆயிரம் ரூபாய் என்பதை கடந்து தமிழ்நாடு அரசு இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 12000 ரூபாய் வழங்கிக் கொண்டிருக்கிறது.
பொங்கல் பரிசு தொகுப்பும் இதே பயனாளிகளுக்கு தான் வழங்கப்படுகிறது. அதனால் ஒரே பயனாளிகள் தமிழ்நாடு அரசின் இரண்டு விதமான திட்டங்களில் நிதியுதவி பெறுகின்றனர். நிதி நிலை சிறப்பாக இருந்திருந்தால் தமிழ்நாடு அரசு இந்த ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்குவதை நிறுத்தியிருக்காது என்றும், மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை சரியாக கொடுத்தால் இதுபோன்ற மக்கள் நல திட்டங்களை தமிழ்நாடு அரசு செய்ய தயாராகவே இருக்கிறது. ஆனால், தமிழ்நாடு அரசு கேட்கும் நிதி, வரிப்பகிர்வு முழுமையாக கிடைப்பதில்லை என்றும் கூறியுள்ளார்.
அதேபோல், பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கமாக வழங்கப்படுமா என்ற கேள்விக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார். மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் நகர்ப்புற மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கும் விழா நேற்று சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்றது. அதில் பேசிய அவர், பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கம் வழங்குவது குறித்து முதல்-அமைச்சர் தான் முடிவெடுப்பார் எனத் தெரிவித்தார்.
இதற்கிடையில், இன்று முதல் தமிழகம் முழுவதும் ரேஷன் பொருட்கள் வழங்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications