நம் நாட்டில் ஒரு பண்டிகை வந்துவிட்டால் சொந்த ஊருக்கு திரும்பி சொந்த பந்தங்களோடு கொண்டாட வேண்டும் என்று நினைப்பவர்கள் பலர். இன்னும் 2 நாட்களில் பொங்கல் பண்டிகை வர இருப்பதால் வெளியூர்களில் பணிபுரிபவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். எனவே பேருந்து நிலையங்கள், ரயில்வே ஸ்டேஷன்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்து வருகிறது. இதனைச் சமாளிக்க பல்வேறு ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது. அதேபோல வெளிநாடுகளில் இருக்கும் நபர்களும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப தொடங்கியுள்ளனர்.
சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது. திருச்சிக்கு பயணம் செய்ய ஏராளமான பயணிகள் திரண்டுள்ளனர். சிங்கப்பூர் மற்றும் திருச்சிக்கு இடையே தினமும் ஏராளமான விமானங்கள் இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்ப்ரஸ் போன்ற விமான நிறுவனங்களால் இயக்கப்படுகின்றன.

திருச்சியில் இருந்து புறப்படும் விமானங்களும் சரி.. சாங்கியில் இருந்து புறப்படும் விமானங்களும் சரி கூட்டத்தில் நிரம்பி வழிகின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்கள் தாயகத்திற்கு திரும்பும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது. அதோடு இந்த அதிகரித்த பயணிகளின் வருகையை சமாளிக்க கூடுதல் விமானங்களை இயக்க வேண்டிய அவசியமும் எழுந்துள்ளது. விமான நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அலைமோதும் போட்டோக்கள் தற்போது இணையதளத்தில் பரவத் தொடங்கியுள்ளன.
இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. விமான நிலையங்களில் போதுமான இருக்கைகள் இல்லாததே இந்த சிரமத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினையை தீர்க்க விமான நிறுவனங்கள் போதிய விமானங்களை இயக்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
பொங்கல் பண்டிகைக்காக மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஸ்ரீலங்கா போன்ற ஊர்களில் இருந்தும் தமிழகத்திற்கு மக்கள் திரும்பி வருகின்றனர். அதோடு பண்டிகை காலம் வரும் போது விமான டிக்கெட் கட்டணங்களும் அதிகரிக்கும். இந்த முறையும் பொங்கலை முன்னிட்டு விமான டிக்கெட் கட்டணங்கள் அதிகரித்துள்ளன.
அதோடு சென்னை போன்ற நகரங்களில் இருந்து பிற நகரங்களுக்கு செல்லும் விமான கட்டணங்களும் முன்பை விட 5 முதல் 7 மடங்கு அதிகமாக உள்ளது. சென்னையிலிருந்து வழக்கமாக மதுரைக்கு ரூ.4000-ஆக இருந்த டிக்கெட் கட்டணம் தற்போது ரூ.17,645-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல திருச்சிக்கு வருவதற்கான வழக்கமான கட்டணம் ரூ.2,200 ஆக இருந்தது, தற்போது அந்த கட்டணம் ரூ.14,337-ஆக உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications