ஹைதராபாத்: இந்தியாவில் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் வேலை வாய்ப்புகள், கல்வி ஆகியவற்றுக்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வேலை கிடைத்து இங்கேயே செட்டிலாகி விடுகின்றனர் .இதனால் நகர் பகுதிகளில் மக்கள் தொகை என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை அதிக மக்கள் தொகை கொண்ட நகரம் டெல்லி, இங்கே 3.38 கோடி மக்கள் இருக்கின்றனர். இரண்டாவது இடத்தில் இருப்பது மும்பை, இங்கே 2.16 கோடி மக்களும், கொல்கத்தாவில் 1.5 கோடி மக்களும் பெங்களூருவில் 1.4 கோடி மக்களும் இருக்கின்றனர்.

சென்னை பொறுத்தவரை 1.2 கோடி மக்கள் இருக்கின்றனர், இந்த பட்டியலில் ஹைதராபாத் ஆறாவது இடத்தில் இருக்கிறது. இங்கே 1.1 கோடி மக்கள் இருக்கின்றனர். அண்மையில் ஐநாவின் உலக நகரமயமாக்கல் அறிக்கை வெளியிட்டுள்ள தகவலின் படி தான் இந்த எண்கள் பெறப்பட்டுள்ளன.
இதில் ஹைதராபாத்தில் மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப வசதிகள் எதுவும் உருவாக்கப்படவில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர். 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஹைதராபாத் நகரில் மக்கள் தொகையை 2.48% அதிகரித்துள்ளது. இந்த சூழலில் மக்கள் தொகை அதிகரிப்பு தான் ஹைதராபாத் நகர மேம்பாட்டுக்கு தடையாக இருக்கிறது என நிபுணர்கள் விமர்சிக்கின்றனர்.
மக்கள் தொகை அதிகரிப்பதால் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது , சுகாதாரத்தை பேணுவது,வீட்டு வசதிகளை ஏற்படுத்தி தருவது, உணவு, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். இந்த தடைகள் வருங்கால சந்ததியினரின் முன்னேற்றத்திற்கும் தடை விதிக்கின்றன என்கின்றனர்.
அண்மையில் வெளியான ஒரு ஆன்லைன் அறிக்கையானது வேகமாக வளர்ந்து வரக்கூடிய ஹைதராபாத் நகருக்கு பல்வேறு கட்டமைப்பு ரீதியான பிரச்சினைகள் ஏற்படுவதாக சுட்டிக்காட்டுகிறது.
உதாரணமாக வீட்டு வசதி, குடிநீர், மின்சாரம் ,பொது போக்குவரத்து வசதிகள் இவற்றிற்கெல்லாம் தேவை அதிகரித்துள்ளது. மக்கள் தொகை அதிகரிப்பு என்பது சுற்றுச்சூழல் மாசினை அதிகரிக்கிறது ,காற்றின் தரத்தை குறைக்கிறது மற்றும் சுற்றுச்சூழலையும் பாதிக்கிறது என்ற பார்வையும் முன்வைக்கப்படுகிறது.
நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே வந்தால் எந்த ஒரு உள் கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்த முடியாமல் ஹைதராபாத் நகரம் மக்கள் வாழ தகுதியற்ற நகரமாக மாறிவிடும் என அந்த ஆன்லைன் அறிக்கையானது தெரிவிக்கிறது. ஹைதராபாத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்களின் எண்ணிக்கை 13 சதவிகிதம்.அரசின் பொது கழிவறைகள் உள்ளிட்டவற்றை நம்பி வாழக்கூடிய மக்கள் சுமார் 17 லட்சம் பேர் இருக்கிறார்கள்.
இவர்களுக்கான உள்கட்டமைப்புகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்தாலும் மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப அது ஈடு செய்யப்படவில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.
பசுமை பகுதி குறைந்து வருவது, சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது, நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பது ஆகியவை வருங்காலத்தில் மிகப்பெரிய பிரச்சினையாக அமையும் என்றும் கூறுகின்றனர். மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப வேலை வாய்ப்புகள் அதிகரித்து பொருளாதாரம் உயர்ந்தாலும் வாழ்க்கை தரம் என்பது படிப்படியாக குறைந்து வருகிறது என்பதுதான் இவர்கள் முன்வைக்கக்கூடிய ஒரு வாதம்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications