பொதுவாக ஒரு காரை நம் இந்திய சாலைகளில் ஓட்டிச் செல்லும் போது சாலை விதிகளை மீறினால் 500, 1000 இல்லை என்றால் அதிகபட்சம் 10,000 அல்லது 20,000 ரூபாய் தான் அபராதமாகச் செலுத்துவோம்.
ஆனால் இங்கு ஒரு நபர், தன்னுடைய ஒரே ஒரு காருக்கு 27.68 லட்சம் ரூபாய் அபராதமாகச் செலுத்தி இருக்கிறார்.
என்ன தவறு செய்தார்..? ஏன் அதிகாரிகள், லட்சக் கணக்கில் அபராதம் விதித்தார்கள். வாங்கஜி என்னன்னு பார்ப்போம்.
கார்
பார்ஷ் (Porsche) 911 தான் அந்த காரின் பெயர். இந்த கார் அதிகபட்சமாக சுமார் 320 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக் கூடியது. இந்த காரின் விலை மட்டும் சுமார் 2 கோடி ரூபாயாம். இரண்டு பேர் மட்டுமே அமர்ந்து செல்லக் கூடிய இந்த காரில் பல அதிரடி வசதிகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது. சரி கார் உரிமையாளர் செலுத்திய அபராதக் கதைக்கு வருவோம்.
பிடிபட்ட கார்
கடந்த நவம்பர் 28, 2018 அன்று, இந்த பார்ஷ் 911 ரக, சில்வர் கலர் கார், குஜராத் மாநிலத்தின் அஹமதாபாத் நகரத்தில் ஹெல்மெட் க்ராஸ் ரோட் பகுதியில் சென்று கொண்டு இருக்கிறது. நம்பர் பிளேட் இல்லாமல் வந்த பார்ஷ் காரை, காவல் துறை துணை ஆய்வாளர் எம் பி விர்ஜா கவனித்து, வாகனத்தை நிறுத்தி விசாரிக்கிறார்.
ஒன்னுமே இல்ல
பிடிபட்ட காரின் டாக்குமெண்ட்களை எல்லாம் கேட்டு இருக்கிறார். ஓட்டுநர் சரியாக பதில் சொல்லவில்லை. டாக்குமெண்ட்களைக் கொடுக்கவில்லை. எனவே காரை பறிமுதல் செய்து, மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் சுமார் 9 லட்சம் ரூபாய்க்கு ஒரு ஆர்டிஓ மெமோ கொடுத்து இருக்கிறார்கள். மெமோவில் சொல்லப்பட்டு இருக்கும் அபராதத் தொகையை கார் உரிமையாளர் ஆர்டிஓ அலுவலகத்தில் செலுத்திய பின் தான் காவலர்களிடம் இருந்து காரை வாங்க முடியும்.
முரட்டு சம்பவம்
பார்ஷ் காரின் உரிமையாளர் தனக்கு விதிக்கப்பட்டு இருந்த 9 லட்சம் ரூபாய் அபராதத்தைச் செலுத்த அஹமதாபாத் ஆர்டிஓ அலுவலகத்துக்குச் சென்று இருக்கிறார். அப்போது தான் வாகனத்தைப் பற்றிய விவரங்கள் அவருக்குத் தெரிய வந்திருக்கிறது. வெறும் 9.8 லட்சம் ரூபாய் செலுத்தச் சென்றவருக்கு ஆர்டிஓ 27.68 லட்சம் செலுத்தச் சொல்லி இருக்கிறார்.
எப்படி
பிடிபட்ட பார்ஷ் கார், கடந்த 2017-ம் ஆண்டு இறக்குமதி செய்து இருக்கிறார்கள். அதன் பின், ஹரியானாவில் பதிவு செய்து இருக்கிறார்கள். அஹமதாபாத் காவலர்களிடம் வாகனம் பிடிபட்ட போது நம்பர் பிளேட் இல்லை. அதோடு ஹரியானா நம்பர் பிளேட் உடன், குஜராத்தில் இருந்து இருக்கிறது.
தொகை கணக்கு
எனவே பார்ஷ் காருக்கு வாழ் நாள் வரி, அதுநாள் வரை செலுத்தாத வரிக்கு வட்டி மற்றும் அபராதம் என எல்லாம் சேர்த்து 27.68 லட்சத்துக்கு பில் கொடுத்து இருக்கிறார். 16 லட்சம் ரூபாய் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வரி + 7.68 லட்சம் ரூபாய் வட்டி, 4 லட்சம் ரூபாய் என 27.68 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தி, கடந்த ஜனவரி 07-ம் தேதி தான் வாகனத்தை மீட்டு இருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications