ஜெர்மனி: பிரபல ஆடம்பர கார் உற்பத்தி நிறுவனமான பார்ஷே 1900 ஊழியர்களை பணியில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஜெர்மனி நாட்டை சேர்ந்த பார்ஷே நிறுவனம் சர்வதேச அளவில் ஆடம்பர மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனம் திடீரென தங்கள் நிறுவனத்தில் பணியாற்றி வரக்கூடிய 1900 பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜெர்மனியில் இருக்கும் தங்களுடைய இரண்டு முக்கியமான உற்பத்தி நிலையங்களில் இருந்து தான் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர் என பார்ஷே நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியாகியுள்ள தகவலின்படி சர்வதேச அளவில் தற்போது மின்சார வாகனங்களுக்கான தேவை குறைந்திருப்பது மற்றும் விற்பனை குறைந்த இருப்பதன் காரணமாக ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு பார்ஷே நிறுவனம் ஆளாகி இருப்பதாக தெரிகிறது. இந்த பணிநீக்க நடவடிக்கை என்பது பல்வேறு ஊழியர்களும் தாங்களாகவே முன்கூட்டியே ஓய்வு பெறுவதற்கான வாய்ப்புடன் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தங்கள் நிறுவனத்தில் இரண்டு முக்கியமான ஆலைகளில் பணிபுரியும் ஊழியர்களில் 15 சதவீதம் குறைக்கப்படுவார்கள் என பார்ஷே நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனங்கள் சீன நிறுவனங்களுடன் கடும் போட்டியை எதிர்கொண்டிருக்கின்றன. இதனால் விற்பனை சரிவடைந்துள்ளது.
இதனால் பார்ஷே நிறுவனம் கடந்த ஆண்டிலேயே விற்பனை இலக்கை எட்ட முடியாமல் போனது. இதனால் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலைமைக்கு ஆளாகி இருக்கிறது. மேலும் பார்ஷே நிறுவனம் பல்வேறு புதிய மாடல்களை தயாரித்து வருகிறது. இதற்கு அதிக பணத்தை செலவிடுவதாக சொல்லப்படுகிறது. தற்போதைக்கு இந்த நிறுவனம் 42,000 பேருக்கு வேலைவாய்ப்பை தந்துள்ளது.
சர்வதேச அளவில் மக்கள் மின்சார வாகனங்களுக்கு மாறும் போக்கு மந்தம் அடைந்திருப்பது, அதிகப்படியான போட்டி மற்றும் கார் உற்பத்திக்கான செலவு அதிகரிப்பு ஆகியவை காரணமாக ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஐரோப்பிய கார் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. ஃபோக்ஸ்வேகன் கார் நிறுவனத்தின் துணை நிறுவனம்தான் பார்ஷே.
ஐரோப்பாவின் முக்கியமான வாகன உற்பத்தியாளராக இருந்து வருகிறது ஃபோக்ஸ்வேகன். மொத்தம் 12 பிராண்டுகளில் இந்த நிறுவனம் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. ஆனால் கடந்த ஆண்டு முதலே ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் கார்கள் விற்பனை சரிவடைந்து வருகிறது. இதனால் இந்த நிறுவனம் ஏற்கனவே ஊழியர்கள் பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டிருந்தது. தற்போது அதன் துணை நிறுவனமும் பணி நீக்க நடவடிக்கையில் இறங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications