இந்த டிஜிட்டல் மயமான வாழ்க்கை முறையில் ரொக்க பணத்தின் தேவையும், அவசியமும் மிகவும் குறைவு என்றாலும், பல இடத்தில் பல தருணத்தில் பணம் தேவைப்படுவதை ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும்.
அவசர தேவைக்கு பணம் தேவைப்படும் வேளையில், வங்கி அல்லது ஏடிஎம் செல்ல நேரமில்லாத போது, உங்க வீட்டுக்கே ஏடிஎம் வந்தால் எப்படியிருக்கும். இப்படிப்பட்ட சேவையைத் தான் இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (IPPB) வழங்குகிறது.

இப்படியொரு சேவை இருப்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அரசு மக்கள் நலனுக்காகப் பல சிறப்புத் திட்டங்களை உருவாக்கினாலும் அது மக்களிடையே செல்லாமல் இருக்கிறது, இதில் முக்கியமான ஒன்று தான் இந்த ஆன்லைன் ஆதார் ஏடிஎம் (AePS) சேவை. இச்சேவையைப் பயன்படுத்தி உங்கள் வீட்டிலிருந்தே பணத்தைப் பெறலாம்.
ஆதார் ஏடிஎம் (AePS) என்றால் என்ன?: ஆதார் இயக்கப்பட்ட பணம் செலுத்தும் முறை (Aadhaar Enabled Payment System - AePS) என்பது ஒரு தனிநபர் தனது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கணக்கிலிருந்து Biometric தரவுகளைப் பயன்படுத்தி பணத்தை எடுக்க அல்லது பணம் செலுத்தும் வசதியாகும்.
வாடிக்கையாளர்கள் ஏடிஎம் அல்லது வங்கிக்குச் செல்ல வேண்டிய அவசியமின்றி, ஏஇபிஎஸ் மூலம் குறைந்த அளவிலான பணத்தை எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் நேரத்தை மிச்சப்படுத்துவது மட்டும் அல்லாமல் ஏடிஎம் இல்லாத இடத்தில் மக்களுக்கு ரொக்க பண தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்.

ஐபிபிஎஸ் சமூக வலைத்தள பதிவு: X சமூக வலைத்தளத்தில் இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (IPPB) வெளியிட்ட செய்தியில், "அவசர தேவைக்குப் பணம் தேவைப்படுகிறதா, ஆனால் வங்கிக்குச் செல்ல நேரமில்லையா? கவலை வேண்டாம்! ஐபிபி ஆன்லைன் ஆதார் ஏடிஎம் (ஏஇபிஎஸ்) சேவையைப் பயன்படுத்தி உங்கள் வீட்டிலிருந்தே பணத்தைப் பெறுங்கள். உங்கள் தபால் நிலைய ஊழியர் இப்போது உங்கள் வீட்டு வாசலிலேயே பணத்தைப் பெற உதவுகிறார். இப்போதே பயன்படுத்திக் கொள்ளுங்கள்! " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
AePS திட்டத்தின் கீழ் ஒவ்வொரு தபால் அலுவலகத்திற்கும் வணிகர் தூதர் என்ற பதவியில் ஒருவர் நியமிக்கப்பட்டு இருப்பார். இவரின் தலைமையில் அல்லது உதவியில் தான் AePS திட்டம் செயல்படுகிறது
நேஷ்னல் பேமெண்ட்ஸ் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா (NPCI) அளிக்கும் விளக்கத்தின்படி, வணிகர் தூதர் (Business Correspondent - BC) என்பவர் அங்கீகரிக்கப்பட்ட வங்கி முகவர் ஆவார். இவர் மைக்ரோ ஏடிஎம் (MicroATM டெர்மினல்) மூலம் வங்கி சேவையைப் பெற விரும்புவோருக்கு அடிப்படை வங்கி சேவைகளை வழங்குகிறார்.
ஏஇபிஎஸ் சேவையின் கீழ் கிடைக்கும் சேவைகள்: AePS சேவையின் கீழ் கிடைக்கும் சேவைகள் பின்வருமாறு: ரொக்க பணம் எடுத்தல் (Cash Withdrawal), கணக்கின் இருப்பு நிலை தெரிந்துகொள்ளுதல் (Balance Enquiry), மின் ஸ்டேட்மென்ட் (Mini Statement).


Click it and Unblock the Notifications