போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் பிற மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை காட்டிலும் பாதுகாப்பான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இதற்கான முக்கியக் காரணம் என்று பார்த்தல் இந்தத் திட்டங்களை அரசாங்கம் வழங்குகிறது. அந்த வகையில் ஒரு முறை முதலீட்டுக்கு மாதம் மாதம் வருமானம் தரும் ஒரு திட்டம் தான் அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமான திட்டம் (MIS). இந்தப் பதிவில் முதிர்வு காலத்திற்கு முன்பே இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் தொகையை திரும்பப்பெற்றால் எவ்வளவு அபராதம் விதிக்கப்படும் என்ற விவரங்களை விரிவாகப் பார்ப்போம்.
போஸ்ட் ஆபீஸ் MIS என்றால் என்ன?: போஸ்ட் ஆபீஸ் மாதந்திர வருமானத் திட்டத்தில் மொத்தமாக ஒரு முறை முதலீடு செய்ய வேண்டும். அதன் பிறகு 5 வருடங்களுக்கு மாதம் மாதம் வட்டி வருமானம் வழங்கப்படும். இந்த வருமானம் உங்களுடைய முதலீட்டுக்கு ஏற்ப இருக்கும். இதன் மூலம், முதலீட்டாளர்கள் மாதந்தோறும் பணத்தை எடுக்கலாம். மற்ற அஞ்சல் அலுவலக திட்டங்களைப் போலவே இந்தத் திட்டமும் நிதி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

7.4 சதவீத வட்டி விகிதத்தை வழங்கும் அஞ்சல் அலுவலகத்தின் அதிக வருவாய் ஈட்டும் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமான திட்டத்திற்கு ஒருவர் தனிநபராகவோ அல்லது கூட்டாகவோ கணக்கைத் திறக்கலாம். மேலும் முதலீடாளர்கள் வெறும் 1000 ரூபாயில் கணக்கைத் திறக்க முடியும்.
தனிநபராக முதலீடு செய்தால் அதிகபட்ச வரம்பு 9 லட்சம். அதுவே கூட்டுக் கணக்காக முதலீடு செய்ய விரும்பினால் அதிகபட்சமாக 15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். அதன் பின் நீங்கள் எந்தவித முதலீடும் செய்ய வேண்டியிருக்காது. போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமான திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். அதாவது அடுத்த 5 ஆண்டுகளுக்கு உங்களுக்கு மாதம் மாதம் வருமானம் வழங்கப்படும். ஒவ்வொரு மாதமும் கணக்கு துவங்கிய நாளிலிருந்து முதிர்வு காலம் வரை வட்டி வருமானம் செலுத்தப்படும்.
அவசரகாலத்தில் பணத்தை எடுப்பதற்கான விதிகள்: ஒரு முதலீட்டாளர் எந்த சூழ்நிலையிலும் இந்தத் திட்டத்தின் கீழ் 1 வருடத்திற்கு முன் பணத்தை எடுக்க முடியாது. இருப்பினும், 1 வருடத்திற்குப் பிறகு, கணக்கை மூடலாம். ஆனால் அதற்கு நீங்கள் அபராதம் செலுத்த வேண்டும்.
முதிர்வுக்கு முன் கணக்கை மூடுவதற்கு எவ்வளவு அபராதம்?: 1 வருடம் முதல் 3 ஆண்டுகளுக்குள் பணத்தை எடுத்தால், டெபாசிட் தொகையில் 2 சதவீதம் கழிக்கப்பட்டு பணம் திருப்பி செலுத்தப்படும். அதேசமயம், நீங்கள் 3 முதல் 5 வருடங்களுக்குள் பணத்தை எடுக்க விரும்பினால், டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் இருந்து 1 சதவீதத்தை கழித்த பிறகு தொகை உங்களுக்குத் திருப்பித் தரப்படும். அதே நேரத்தில், 5 ஆண்டுகள் முடிந்த பிறகு, நீங்கள் முழுத் தொகையையும் திரும்பப் பெறலாம்.
5 லட்சம், 9 லட்சம் மற்றும் 15 லட்சம் டெபாசிட்களின் வருமானம் என்ன?: போஸ்ட் ஆஃபீஸ் எம்ஐஎஸ் கால்குலேட்டரின் படி, நீங்கள் ரூ.5 லட்சத்தை தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தில் டெபாசிட் செய்தால், 7.4 சதவீத வட்டி விகிதத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.3,083 சம்பாதிப்பீர்கள். அதேசமயம் அதிகபட்சமாக ரூ.9 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.5,550 சம்பாதிக்கலாம். கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சத்தை முதலீடு செய்தால், இந்தத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் ரூ.9,250 சம்பாதிக்கலாம்.


Click it and Unblock the Notifications