போஸ்ட் ஆபீஸ்களில் வழங்கப்படும் PPF திட்டம் நீண்ட கால சேமிப்பு திட்டம் ஆகும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளைப் போல் அல்லாமல் பாதுகாப்பான முதலீட்டைத் தேடும் முதலீட்டாளர்களுக்கு PPF திட்டம் சிறந்தத் தேர்வாக இருக்கும். பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது அரசாங்கத்தால் வழங்கப்படும் சேமிப்புத் திட்டம். தற்போது, PPF திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.1 சதவீதமாக உள்ளது. இந்தப் பதிவில் PPF முதலீட்டின் மூலம் உங்களுடைய பணத்தை எப்படி இரட்டிப்பாக்கலாம்? என்று பார்ப்போம்.
இந்தத் திட்டமானது 15 வருடங்கள் லாக்-இன் காலத்தைக் கொண்டுள்ளது. தேவைப்பட்டால் இந்த முதிர்வுக் காலத்தை மேலும் 5 வருடங்களுக்கு நீட்டிக்க முடியும்.

PPF திட்டத்தின் குறிப்பிடத்தக்க நன்மை அதன் வரி சேமிப்பு அம்சங்கள் ஆகும். PPF கணக்கில் செலுத்தப்படும் பங்களிப்புகள் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C இன் கீழ் வரி விலக்குகளுக்குத் தகுதிபெறும். PPF திட்டத்தில் குறைந்த பட்சமாக 500 ரூபாய் முதல் அதிகபட்சமாக ஒரு நிதியாண்டுக்கு 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
கூடுதலாக, திரட்டப்பட்ட வட்டி மற்றும் முதிர்வுத் தொகை ஆகிய இரண்டும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
PPF வட்டி எவ்வாறு செயல்படுகிறது?: உங்கள் பிபிஎஃப் கணக்கின் வட்டி ஆண்டுதோறும் கூட்டப்பட்டு, ஒரு நிதியாண்டின் இறுதியில் வரவு வைக்கப்படும். வட்டி கணக்கீடு மாதத்தின் 5 ஆம் தேதிக்கும் மாதத்தின் கடைசி நாளுக்கும் இடையில் கணக்கில் உள்ள மிகக் குறைந்த பேலன்ஸின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. எனவே, உங்கள் வட்டியை அதிகரிக்க, ஒவ்வொரு மாதமும் 5-ஆம் தேதிக்கு முன் உங்கள் PPF முதலீடுளைச் செய்வது நல்லது.
உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்குதல்: ஒரு நபர் 10,000 ரூபாயை மாதம் மாதம் PPF திட்டத்தில் முதலீடு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால் ஒரு வருடத்திற்கு 1.2 லட்சம் ரூபாயை முதலீடு செய்திருப்பார். தற்போது வழங்கப்படும் 7.1% வட்டி விகிதத்தில் 15 ஆண்டுகளுக்கு தொடர்ந்து முதலீடு செய்தால் மொத்தமாக 18 லட்சம் ரூபாயை முதலீடு செய்திருப்பீர்கள். 7.1% வட்டி விகிதத்தில் அதற்கு வட்டியாக 13.56 லட்சம் ரூபாய் கிடைக்கும். இதன் மூலம் உங்களுடைய மொத்த முதிர்வு தொகை 31 லட்ச ரூபாயாக இருக்கும்.
அதேபோல PPF திட்டத்தில் வருடத்திற்கு 1.2 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய முடியாதவர்கள் உங்களால் இயன்ற தொகையை முதலீடு செய்து முதலீட்டை இரட்டிப்பாக்க முடியும்.
PPF திட்டத்தில் முன்கூட்டியே முதலீடு செய்ய தொடங்கும் போது கூட்டு வட்டியின் மூலம் அதிக அளவில் லாபம் பார்க்க முடியும். மேலும் 15 வருட லாக்-கின் காலத்திற்குப் பிறகு உங்கள் PPF கணக்கை 5 வருடங்களுக்கு நீட்டித்தால் உங்கள் பணத்தை முதலீடு இல்லாமல் கூட்டு வட்டியின் மூலம் அதிகரிக்க முடியும்.


Click it and Unblock the Notifications